tamilnadu

img

சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பணப் பாக்கியை கரும்பு விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திடுக... வேளாண்துறை அமைச்சரிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை மனு....

சென்னை:
 தனியார், கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பணப்பாக்கியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரி வேளாண்துறை அமைச்சரிடம்தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ஜீ.மாதவன், நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலைசங்க நிர்வாகிகள் ஆர்.தென்னரசு, டி.எம்.ரவிக்குமார் ஆகியோர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர்   எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களை ஜூலை  2 அன்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வேளாண்துறை அமைச்சர், கரும்பு விவசாயிகளின் கரும்பு பண பாக்கியை தருவதற்கும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மேம்படுத்திடவும், நடப்பு அரவை பருவத்திற்கான ஊக்கத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கிடவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். நெல்லிக்குப்பம் இஐடி பாரிஆலை நிர்வாகம் அனுமதிக்கப்பட்டதை விட கரும்பு கழிவு ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக கரும்பு எடைபிடித்தம் செய்கின்றனர். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஒரு சதவீதம் மட்டுமே கரும்பு கழிவுக்காக எடை பிடித்தம்செய்திட உரிய உத்தரவு பிறப்பித்திடவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கைகள்
2020-21 நடப்பு பருவத்தில் அரைத்த கரும்புக்கு சக்தி சுகர்ஸ், ராஜஸ்ரீதனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.தரணி சர்க்கரை ஆலைகள் (வாசுதேவநல்லூர், போளூர், கலையநல்லூர்) 2018-19ல் அரைத்த கரும்புக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.74 கோடி கரும்பு பண பாக்கியை தரவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கரும்பு பயிர்க்கடனுக்கு வட்டி மற்றும் கூட்டு வட்டி செலுத்தி பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

தரணி சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ.74 கோடியை வட்டியுடன் பெற்றுத்தர சட்டப்படியான நடவடிக்கை எடுத்திடவேண்டுகிறோம். 2013-14, 2014-15, 2015-16, 2016-17ஆகிய நான்கு ஆண்டுகளாக மாநிலஅரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை மாநிலத்திலுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. ரூ.1217 கோடி வரை பாக்கி உள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கியைவிவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி  2021-22 ஆண்டுக்கு (9.5 பிழிதிறன்) ஒருடன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் விலைஅறிவித்து வழங்கிட வேண்டும். மாநிலத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கடன்சுமையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.சர்க்கரை ஆலைகள் சர்க்கரை விற்பதற்கு ஒன்றிய அரசு கோட்டா முறையை செயல்படுத்துவதை தமிழ்நாட்டிற்கு ரத்து செய்திட வேண்டும் என ஒன்றிய அரசை நிர்ப்பந்தித்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தியை சந்தித்தும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

;