சென்னை, ஆக. 30 - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான கல்வி பயில்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து சென்றுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான இந்த மூன்று மாத காலக்கட்டத்தில் தமிழக பாஜகவின் அன்றாட கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, பாஜக மூத்தத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம். சக்கரவர்த்தி, பி. கனகசபாபதி, பொதுச் செயலாளர் களான எம். முருகானந்தம், பேராசிரியர் ராம. சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோருக்கு குழுவில் இடம் வழங்கப்படவில்லை. தமிழிசை சவுந்தர ராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டார். எனினும் தோற்றுப் போனார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சில கருத்துகளை தெரி வித்ததாக அப்போது தகவல் பரவியது. இதன் காரண மாகவே கட்சி பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, மேடையில் வைத்தே தமிழிசையை கண்டித்ததாக கூறப்பட்டது. அமித் ஷா, தமிழிசையிடம் அதிகார தொனியில் பேசுவது போன்ற வீடியோ காட்சி சில மாதங்களுக்கு முன் வைரலானது குறிப்பிடத்தக்கது.