tamilnadu

img

நாடெங்கும் பணியாற்றத் தயாராக இருந்தும் மருத்துவ சேவைப் படையை உருவாக்க மறுப்பு.... மோடி அரசு மீது மருத்துவர் ஜெயலால் குற்றச்சாட்டு....

சென்னை:
பெருந்தொற்றுகளுக்கு எதிரான போரில் களப்பணியாற்றிடத் தயாராக உள்ள மருத்துவ சேவைப் படையை உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க ஒன்றிய அரசு மறுப்பது ஏன் என்று இந்திய மருத்துவர்கள் சங்க (ஐஎம்ஏ) தலைவர் ஜே.ஏ. ஜெயலால் கேள்வி எழுப்பினார். அப்படியொரு படை உருவாகுமானால் அதில் பங்கேற்க முன்வந்துள்ள ஆயிரம் மருத்துவர்களது பட்டியலை அரசு பொருட்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் (டீஎப்பிஎச்) சார்பில் இணைய தள மேடையில் ஜூன் 4 அன்று நடைபெற்ற, கோவிட் வீரர்களுக்கு நன்றி நிகழ்வில் பேசிய அவர், “அந்த ஆயிரம் மருத்துவர்களின் பெயர், தொடர்பு முகவரி, அவர்களது கல்வித்தகுதி, மருத்துவ அனுபவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடனும் கூடிய பட்டியலை அரசுக்கு அளித்தோம். தற்போது தங்கள் பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிற அவர்கள் நாட்டின் எந்த மூலைக்கு அனுப்பினாலும் அங்கே சென்று பணியாற்றத் தயாராக இருக்கிறார்கள். அப்படியொரு படை உருவாக்கப்பட்டிருக்குமானால், குறிப்பாக இன்றைய இரண்டாவது அலை காலக்கட்டத்தில் அவர்களின் சேவை நாட்டு மக்களுக்குக் கிடைக்கும். களப்பணியாற்றிக்கொண்டிருக்கிற மற்ற மருத்துவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால் அரசு ஏனோ இந்த ஆலோசனையைப் புறக்கணித்துவிட்டது,” என்றார்.

இந்த மருத்துவர்களுக்கு அரசு போதிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ஐஎம்ஏ கோரியது. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் களப்பணிக்கு மருத்துவர்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் ஊதியம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனை உதவியாளருக்குக் கூட நாளொன்றுக்கு 330 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் செய்யப்பட்ட விளம்பரத்தில், மருத்துவர்களுக்கு மாதம் 16,000 ரூபாய் ஊதியம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் தாங்களாக நாட்டின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற முன்வருகிற மருத்துவர்களை வரவேற்பதற்கு மாறாக, இப்படிப்பட்ட வழிகளைத்தான் பின்பற்றுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.

38 கோடி எங்கே போனது?

தடுப்பூசி பிரச்சனையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாதமும் 10 கோடி தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் திறன் நமக்கு இருக்கிறது என அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 மாத காலத்தில் 60 கோடி தடுப்பூசி மருந்து தயாரித்திருக்க முடியும், 60 கோடிப் பேருக்கு வழங்கியிருக்க முடியும்.  ஆனால் 22 கோடி அளவுக்குத்தான் நமக்குக் கிடைத்தது. மீதி 38 கோடி எங்கே போனது? ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது, பெருமையடித்துக்கொள்ளப்பட்டதேயன்றி நமக்கான தேவை உணரப்படவில்லை.

ஆக்சிஜன் உற்பத்தி முக்கியமாகத் தொழில்துறைத் தேவைகளுக்காகவே நடக்கிறது. தயாரிப்பு ஏற்பாடுகளும் விமான சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளும் இருக்கிற இடங்களில் பிரச்சனை இல்லை. ஆனால், கோவிட் நோய் கிராமங்களை அடைகிறபோது, அங்கெல்லாம் ஆக்சிஜன் கொண்டு செல்ல வழியில்லை. ஆகவேதான் பிரச்சனை ஏற்பட்டதேயல்லாமல், போதுமான ஆக்சிஜன் தயாரிப்பு இல்லை என்பது மட்டுமே பிரச்சனை அல்ல.நிதிப் பிரச்சனை பற்றிப் பேசப்படுகிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தடுப்பூசி கொள்முதலுக்கென்று 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சீரம் நிறுவனம் தனது தயாரிப்புக்கு 125 ரூபாய் விலை நிர்ணயித்தது. பட்ஜெட் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், நாட்டு மக்கள்தொகையில் 100 கோடிப் பேருக்கான தடுப்பூசிகளை வாங்கியிருக்க முடியும். ஆனால் அரசு தடுப்பூசிக்கான மாறுபட்ட விலைக்கொள்கையைத்தான் அறிவித்தது. மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொறுப்போடு கையாளும் நிர்வாகமில்லை
ஆக, இங்கே சேவையாற்றுவதற்கான மனிதர்கள் இருக்கிறார்கள், மருந்து உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான பொருள்கள் இருக்கின்றன, நிதி இருக்கிறது. எல்லாம் இருந்தும் பொறுப்போடு கையாளுகிற சரியான ஆட்சி நிர்வாகம்தான் இல்லை. 
இதர முன்களப் பணியாளர்கள் போல மருத்துவர்கள் நாள்தோறும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், அபாய நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் அவர்கள் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சென்ற ஆண்டிலும் இந்த ஆண்டிலுமாக நாடு முழுவதும் சுமார் 1,400 மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். இன்னொருபுறம், மருத்துவர்கள்  வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை. மருத்துவப் பணிகள் சார்ந்த இப்படிப்பட்ட வன்முறைகளிலிருந்து மருத்துவர்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் தேவை.

அரசாங்கத்தைச் சொல்கிறார்கள்
”ஆனால், உங்களுடைய மருத்துவ அமைப்புமுறை முட்டாள்தனமானது, லட்சக்கணக்கானோரை அது கொன்றுவிட்டது என்று பேசுகிறார்கள். யார் இந்த அமைப்புமுறையைக் கொடுத்தது? இந்திய அரசாங்கமும் ஐசிஎம்ஆர் போன்ற அரசு நிறுவனங்களும் ஏற்படுத்திய அமைப்புதானே இது? எந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும், எந்த மருந்தைக் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்வது யார்? இந்த அமைப்புமுறை முட்டாள்தனமானது என்கிறார்கள் என்றால் அரசாங்கத்தை அப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் பொருள். ஆனால் பலமுறை நாங்கள் வேண்டுகோள் விடுத்தும், இவர்களுடைய இப்படிப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலளிக்க அரசாங்கம் தயாராக இல்லை. இதையெல்லாம் மீறி மக்களுக்கு சேவையாற்றிக்கொண்டிருக்கிற சக மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இதர முன்களப் பணியாளர்களுக்கும் எனது வணக்கங்களை உரித்தாக்குகிறேன்,” என்றார் மருத்துவர் ஜெயலால். பதஞ்சலி நிறுவன தலைவர் பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்திப் பேசியதற்காக இழப்பீடு கோரி ஐஎம்ஏ வழக்குத் தொடுத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, ராம்தேவ் உதவியாளர் ஒருவர், இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்ற ஜெயலால் முயல்கிறார் என்று கூறி பிரச்சனைக்கு மதவாதம் பூச முயன்றது குறிப்பிடத்தக்கது.

;