tamilnadu

img

ஆட்டோக்கள் இயங்க அனுமதி - நிவாரணம் வழங்குக....

சென்னை:
சமூக இடைவெளியுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம்  நிவாரணம்வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகஅரசின் கடுமையான அடக்குமுறையைக் கண்டித்தும்   தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்அலுவலகங்கள்  முன்பு மே 21 வியாழனன்று ஆவேசஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். சிஐடியுமாவட்டச் செயலாளர்கள், சம்மேளன நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் வி.குமார், பொதுச்செயலாளர்    எம்.சிவாஜி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அரசாங்கம் எந்தவித நிவாரணமும்வழங்கவில்லை. ஆட்டோக்களை இயக்க அனுமதி இல்லாததால்  ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையான வறுமையையும், நெருக்கடியையும் சந்தித்துள்ளது.  இந்த நிலையில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மே 17-க்குப் பிறகு சமூக இடைவெளியை கடைப்பிடித்துஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  சிஐடியு ஆட்டோ சம்மேளனத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு இ-மெயில் மூலம் மனுக்கள் அனுப்பப்பட்டன.இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படாதது குறித்து ஆட்டோ தொழிலாளர்கள்  மிகுந்த வேதனையில் இருந்தனர். முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள்  ஆகியோருக்கு அரசு நலவாரியத்தில் உள்ளவர்களுக்கும், நலவாரியத்தில் இல்லாதவர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதை  வரவேற்கிறோம். இதேபோல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நலவாரியத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர் களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என தொடர்ந்து கேட்டுவருகிறோம். ஆனால் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த நிதியும் பலருக்கு கிடைக்காத நிலைதான் தொடர்கிறது. தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அலையும் அவலம் தொடர்கிறது.

நான்காம் கட்ட ஊரடங்கில் ஆட்டோக்களுக்குதளர்வு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், ஆட்டோக்கள் இயக்க அனுமதியும் வழங்கப்படவில்லை, நிவாரணமும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கையானது ஆட்டோ தொழிலாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டோ தொழிலாளர் களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஆட்டோக்கள் இயக்க அனுமதியும் கிடைக்கவில்லை எனும் போது வாழ்க்கையை நடத்த போராடுவதை தவிர   வேறு வழியில்லாமல் தமிழகம்முழுவதும் பெருந்திரளாக ஆட்டோ தொழிலாளர்கள்  இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும்  குமரி, நெல்லை, தென்காசி,தூத்துக்குடி, மதுரை புறநகர், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கட
லூர், தஞ்சை, திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், வடசென்னை ஆகிய மாவட்டங்களில் இப்போராட்டங் கள் நடைபெற்றன.           

காவல்துறையை ஏவி அரசு மிரட்டல்
நிவாரணம் கொடுக்க இதயமற்ற தமிழக அதிமுக அரசாங்கம் புதன்கிழமையிலிருந்து காவல்துறையை ஏவி ஒவ்வொரு ஆட்டோ தொழி லாளர்களையும், ஆட்டோ சங்க நிர்வாகிகளையும் மிரட்டியுள்ளனர். ஆட்டோக்களை பறிமுதல் செய்து விடுவதாகவும், வழக்கு போட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலையும் மீறித்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற போராட்டத்தில்  நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். நெல்லையில் 500-க்கும் மேற்பட்டோர், வேலூரில் 300- க்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சங்க தலைவர்கள் கைது-கண்டனம்
அடக்குமுறையின் உச்சமாக தஞ்சையில் சிஐடியு மாவட்டச்செயலாளர் ஜெயபால், திருவள்ளூரில் சிஐடியு மாவட்டச் செயலாளர்இராஜேந்திரன், சம்மேளன துணைப்பொதுச் செயலாளர் சந்திரசேகர், வேலூரில் சம்மேளன நிர்வாகி முரளி, திருவண்ணாமலையில் சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி, செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இச்செயலை  தமிழ்நாடு  ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) கடுமையாக கண்டிக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;