tamilnadu

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்; தமிழில் அர்ச்சனை என்ற முடிவுக்கு வரவேற்பு....

சென்னை:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - தமிழில் அர்ச்சனை அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை அடுத்த நூறு நாளில் நிறைவேற்றப் படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு அறிவித்திருப் பது மகிழ்ச்சி அளிக்கிறது.மனுவாதம் விளைவித்த மூடப் பழக்க வழக்கங்களையும், வேத சாஸ்திர, உபநிடதங்கள் மூலம் வளர்க்கப்படும் புரோகிதப் புல்லிருவித்தனத்தையும்  வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார், 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்க வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக 1970 டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்க வகை செய்யும் முறையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சனாதனவாதிகள் நீதிமன்றம் சென்று இடையூறும், தடைகளும் ஏற்படுத்தினர். இதனை எதிர்த்து சட்டநிலையிலும், சமூகத் தளத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.இதற்கிடையில் கேரள மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டில் ஈழவர் சாதிப் பிரிவை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டார். இதனை எதிர்த்தும் சனாதனிகள் நீதிமன்றம் சென்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இருவர் அமர்வு மன்றம் “அர்ச்சகர் பணி நியமனத் திற்கு ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என வற்புறுத்துவது முதன்மைக் கூறாக இருக்க முடியாது’’ என தீர்ப்பில் கூறியது.இதன் பின்னர் 2006 மே 23  முதல்வர் கலைஞர் முன் முயற்சியால்  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆறு மையங்களில் ஆகம பயிற்சி பள்ளிகள் திறக்கப் பட்டன.சமூகத்தின் பல்வேறு சாதிகளை சேர்ந்த 240 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். இதில் 209 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் இருவர் மட்டும் மிகச் சிறிய கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு, மீதியுள்ள 207 பேர் அர்ச்சகர் பணி நியமனத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், இனி வரும் காலங்களில் கோயில்களில்  தமிழில் அர்ச்சனை செய்வதை  அரசு உறுதி செய்யும் எனவும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் கூறியிருப்பதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.தொடர்ந்து அர்ச்சகர் பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரையும், அரசையும் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;