tamilnadu

img

தொடர் மழையால் 25 லட்சம் ஏக்கரில் பயிர்கள் நாசம்..... நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம்.....

சென்னை:
தொடர் மழையால்  25 லட்சம் ஏக்கரில் நாசமடைந்த பயிர்களுக்குநிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள்பிப்ரவரி 2 செவ்வாயன்று போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனவரி மாதம் பெய்த அபரிமிதமான மழையால் சுமார் 25 லட்சம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் அழிந்துபோயின. எதிர்பாராமல் ஏற்பட்ட இந்தப் பாதிப்புக்கு இழப்பீடுவழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரியிருந்தது. தமிழக முதலமைச்சர் பிப்ரவரி 1 அன்று,  மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள பரப்பளவு சுமார் 17 லட்சம் ஏக்கர் என்றும் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே பாதிப்பு என்றும் குறிப்பிட்டிருப்பது, முறையானகணக்கெடுப்பு நடத்தாமல் பாதிப்பை அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளது என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம், மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம், நீண்டகால பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என்று அறிவித்திருப்பது மிகவும் சொற்பமான தொகையாகும். ரூ.8 ஆயிரம் ஒரு ஏக்கரில்நெல் பயிரிட முடியும் என்ற நுட்பத்தை விவசாயியான முதலமைச்சர் மற்ற விவசாயிகளும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

அறுவடை நேரத்தில் மொத்தமும் அழிந்து இனி எப்படி வாழ்வது என்று விவசாயிகள் திகைத்து நிற்கும் நிலையில், அந்ததுயரத்திலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் உற்பத்திச்செலவை ஈடுகட்டும் வகையில் அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். நெல் உள்ளிட்ட நஞ்சை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், நீண்டகால பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என்றஉயர்த்தி வழங்கினால் தான் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டபாதிப்பிலிருந்து மீள முடியும் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். அத்துடன், புரெவி புயல், நிவர் புயல், பெருமழை என அடுத்தடுத்து பாதிப்புகளை விவசாயிகள் எதிர்கொண்டுள்ள நிலையில் கூட்டுறவு கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதுடன், பயிர்க்காப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டகோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2 அன்று பயிர் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் அரசு கவனத்தில் கொண்டு நிவாரணம் தொடர்பான அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;