சிதம்பரம், ஜூலை 28- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வேலவன் நகரில் வசித்தவர் ராஜாமணி (75). இவர் சிதம்பரம் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சம்பந்தமூர்த்தி என்பவரிடம் கடந்த 20 மாதத்திற்கு முன்பு ரூ. 1 லட்சம்கடன் வாங்கியுள்ளார். இதில் 85 ஆயிரம் திருப்பி செலுத்தி யுள்ளார். ஆனால் கட்டிய பணத்தை வட்டியில் வரவு வைத்து விட்டு, அசல் ரூ. 1 லட்சம் கேட்டு துன்புறுத்தியுள்ளார். அதேபோல் ராஜாமணி அவரது மனைவி உஷாவின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த ராசாத்தி என்பவரிடம் வெற்று பாண்டுபத்திரத்தில் கையொப்பமிட்டு ரூ. 3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு கந்துவட்டியும் முதலுமாகச் சேர்த்து 10 லட்சத்தை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜாமணி கடந்த வியாழனன்று தன்மீது பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இவர் மருத்துவமனையில் சாகும் தருணத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டேன் என்று மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரது மகன் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா காவல்நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட ராசாத்தி, சம்பந்தமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் சிதம்பரம் அருகே மணலூர்பகுதியிலும் பெண் ஒருவர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களை துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் தீவிர விசாரனை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.