சவூதியில் ராணுவத்தின் ஆயுதப்படையில் பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சவூதி அரேபிய நாட்டில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய இளவசரர் முகமது பின் சல்மான் பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தேவையான சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது. ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, 21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் யார் விண்ணப்பித்தாலும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள, கணவர் அல்லது தந்தையின் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் அரச ஆணை பிறப்பிக்கப்பட்டது.
சவுதியின் 87-வது தேசிய தினத்தையொட்டி கடந்த ஆண்டு பெண்கள் முதல்முதலாக மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் பெண்கள் பாதுகாப்புப் படையில் சேர சவுதி அனுமதி அளித்தது.
இந்த நிலையில் சவூதி அரசு பெண்கள் ஆயுதப் படையில் சேர சவுதி அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட்டர் பக்கத்தில், ”பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மற்றொரு படி இதன் மூலம் பெண்கள் சார்ஜெண்டாக பணியாற்ற முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
சவுதி அரசின் பெண்கள் முன்னேற்றத்துக்காக சீர்திருத்தங்களை அந்நாட்டு பெண்ணுரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.