tamilnadu

img

இந்நாள் ஜன. 26 இதற்கு முன்னால்

1808 - ஆஸ்திரேலியாவின் ‘ரம் கலகம்’ நடைபெற்றது. அன்று இங்கிலாந்தின்குற்றவாளிகள் குடியிருப்புகளில் ஒன்றான நியூசவுத்வேல்சின் ஆட்சியைக் கைப்பற்றிய, பெரும் கலகம் என்றும் குறிப்பிடப்படுகிற இதுதான், ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒரே ஆட்சிக்கவிழ்ப்பு என்பதுடன், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியநிகழ்வுமாகும். அப்போது ஆஸ்திரேலியா என்று பெயரிடப்படாத அம்மண்ணில்,குற்றவாளிகளை நாடுகடத்திக் குடியேற்றங்களை ஏற்படுத்திய இங்கிலாந்து, அவற்றை நிர்வகிக்க ஆளுனர்களை நியமித்ததுடன், ராணுவத்தினரையும் அனுப்பியது. அதற்காக நாட்டைவிட்டு வந்த ராணுவத்தினருக்கு ஏராளமான ஊதியம், குறிப்பாக நிலமாக வழங்கப்பட்டது. ஏராளமான நிலம் கிடைத்ததால், ராணுவ அலுவலர்களில் பலரும், பெரியஅளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு, அவற்றை விற்பனை செய்துவந்தனர்.  

இதனால்ஜான் மேக்ஆர்த்தர் உள்ளிட்ட பல ராணுவ அலுவலர்கள்  பெரும் பொருளீட்டி,நிர்வாகத்தில் தலையிடுமளவுக்குச் செல்வாக்கும் பெற்றிருந்தனர். காகிதப்பணத்திற்கும், நாணயங்களுக்கும் தட்டுப்பாடு நிலவியதால் ஒரு சிக்கலான பண்டமாற்று முறை நடைமுறையிலிருந்தது. தொழிலாளர்களுக்கான ஊதியமானது உணவு, துணி உள்ளிட்டவையாக வழங்கப்பட்டாலும், பெரும்பாலும் ரம்-மாக வழங்கப்பட்டதால், பண்டமாற்று ஊடகமாகவே ரம் விளங்கியது. ரம்மைக் கொண்டுவரும் வணிகத்தில் பெரும்பாலும் படையினரே ஈடுபட்டதால், நியூசவுத்வேல்சின் படையினர், ‘ரம்படையினர்’ என்றே அழைக்கப்பட்டனர். போதைக்கு அடிமையாகும் மக்களின் நிலையையும், ரம் வணிகத்தையும், அதில் ராணுவத்திற்கிருந்த தனியுரிமையையும் கட்டுப்படுத்த முயற்சித்த இரண்டாவது, மூன்றாவது ஆளுனர்களுடன், மேக் ஆர்த்தர் உள்ளிட்டவர்களின் செல்வாக்கு மோதல்களை ஏற்படுத்தியிருந்தது. அதனாலேயே, உறுதியான மனிதராக அறியப்பட்ட வில்லியம் ப்ளை ஆளுனராக நியமிக்கப்பட்டார்.

அவரை வரவேற்கமேக்ஆர்த்தர் வந்திருந்தாலும், அவர் தங்கள் பிரதிநிதியல்ல என்றும், அவர்பதுக்கலில் ஈடுபடுவதாகவும் பின்னர் மக்கள் மனு அளித்தனர். ஹாக்ஸ்பரி ஆற்றில்ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, குடியேற்றத்தின் கிடங்குகளிலிருந்த உணவுப்பொருட்களையும், கால்நடைகளையும் ப்ளை வழங்கினார். மக்களின் ஆதரவைப்பெற்ற இது, நெருக்கடியைப் பயன்படுத்தி ராணுவத்தினர் ஈட்டும்லாபத்தையும், பண்டமாற்றையும் பாதித்தது. ரம் வணிகத்தை முறைப்படுத்தியதுடன், சட்டவிரோத இறக்குமதிகளுக்கு அபராதமும் விதித்தார் ப்ளை. முன்பு போல ராணுவத்தினருக்கு ஏராளமான நிலம் வழங்குவதை நிறுத்தியதுடன், நகரின் விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த நிலத்திலிருந்து மேக்ஆர்த்தரை வெளியேறவும் சொன்னார். இவற்றால் (மேக்ஆர்த்தர் பதவியில் இல்லாததால்) மேஜர் ஜான்ஸ்ட்டன் தலைமையில் ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, 1810 ஜனவரி 1வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

;