tamilnadu

img

இந்நாள் ஜன. 15 இதற்கு முன்னால்

69 - ஓதோ என்னும் மார்க்கஸ் சால்வியஸ் ஓதோ ரோமானியப் பேரரசராகப் பதவியேற்றார். 91 நாட்கள் மட்டுமே பேரரசராக இருந்த இவர், ஏப்ரல் 16இல் தற்கொலை செய்துகொண்டார். 68இல் நீரோ மறைவிற்குப்பின் ஏற்பட்ட குழப்பங்களால், நான்கு பேரரசர்களின் ஆண்டு என்று குறிப்பிடப்படும் 69இன் இரண்டாவது பேரரசர் இவர். நீரோவுக்கு நெருக்கமாக இருந்த ஓதோ, அவர் மனைவி (பின்னாளில் நீரோவின் மனைவியும், பட்டத்தரசியுமான) சேபினா தொடர்பான பிரச்சனைகளால் (விளக்கம் வேண்டாமே!), தொலை விலிருந்த மாநிலமான லூசிட்டானியா-வுக்கு ஆளுனராக அனுப்பிவைக்கப் பட்டார். இதனால் நீரோவுடன் மனக்கசப்பு ஏற்பட்ட ஓதோ, நீரோவுக்கெதிராக, அருகாமையிலிருந்த ஹிஸ்பேனியா டெர்ராகானென்சிஸ் மாநிலத்தின் ஆளுனரான கால்பா-வுடன் கூட்டு சேர்ந்தார்.

எளிய மக்களின் அரசனாக இருந்த நீரோ செல்வந்தர்களுக்கு விதித்த வரிகள், குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை கள் கொண்ட ரோமானிய சமூகத்தில், கிறித்தவத்தின் மன்னிப்பு என்பது குற்றங்களை வளர்க்கும் என்ற கருத்து நிலவியதால் கிறித்தவர்கள்மீது மேற்கொண்ட நடவடிக்கை கள் ஆகியவற்றால், (மக்களைத் திரட்டும் சக்திகொண்டிருந்த இவர்களால்) நீரோவுக் கெதிராக உருவான கலகங்களின் இறுதியில், நீரோவுக்குக் ‘கட்டாயத் தற்கொலை’ தண்டனையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 68 ஜூன் 8இல் கால்பா பேரரசரானார். கால்பா, தன்னை ஏற்காத ஊர்களை அழித்தது, நீரோவின் சீர்திருத்தங்களைக் கைவிட்டது, தனக்கெதிராகவும் சதிசெய்யப்படலாம் என்ற அச்சத்தில் பலரையும் கொன்றது ஆகிய வற்றால், கால்பாவைக் கொன்றுவிட்டு ஓதோ பேரரசரானார். எளிய மக்களுக்கான நீரோ வின் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தது, நீரோவால் நியமிக்கப்பட்ட அலுவலர்களை மீண்டும் நியமித்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட ஓதோவுக்கெதிராக, ஜெர்மானியா இன்ஃபீரியர் மாநிலத்தின் ராணுவத் தளபதி விட்டெல்லியஸ் படை யெடுத்துவந்தார்.
 

அவருடனான பெட்ரியாக்கம் சண்டையில், (இரு தரப்பிலுமாக) நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தபோது, ஜெர்மானியா மக்கள் தன்னைவிட விட்டெல்லி யஸை நம்புவதை உணர்ந்த ஓதோ, மிகப்பெரிய உள்நாட்டுப் போரைநோக்கி ரோம் செல்வதைப் புரிந்துகொண்டார். வென்றுவிடுமளவுக்கு மிகப்பெரிய படை அவரிட மிருந்தாலும், உள்நாட்டுப் போரையும், உயிரிழப்புகளையும் தவிர்ப்பதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார். மரணத்திற்குப்பின் அவர்மீதான ரோமானிய மக்களின் மரியாதை பன்மடங்கு உயர்ந்தது. அதனால்தான், சீசருடன் முரண்பட்டுத் தற்கொலை செய்துகொண்ட (இளைய) கேட்டோவின் வாழ்வு, சீசரின் வாழ்வை விட மகத்தானது, ஆனால் அவரது மரணத்தைவிட, ஓதோவின் மரணம் மகத்தான தாகிவிட்டது என்று ரோமானியக் கவிஞர் மார்ஷியல் எழுதினார்.

;