tamilnadu

img

இந்நாள் ஜன. 11 இதற்கு முன்னால்

1972 - பாகிஸ்தானிடமிருந்து விடுதலைபெற்ற கிழக்குப் பாகிஸ்தான், தன் பெயரை பங்களா தேஷ் என்று மாற்றிக்கொண்டது. விடுதலையின்போது, மத அடிப்படையிலேயே இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்ட தால், புவியியல் அடிப்படையில் தொடர்பே இல்லாத கிழக்கு வங்கமும், பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. புவியியல் அடிப்படையில் மட்டுமின்றி, மொழி, பண்பாடு என்று அனைத்திலும் வேறுபட்டிருந்த கிழக்கு வங்கம், 1954இல் ‘ஒன் யூனிட்’ திட்டத்தின்படி கிழக்குப் பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி ஒரே மாநிலமான கிழக்குப் பாகிஸ்தானுக்கு இணையாக மேற்குப் பாகிஸ்தானின் நான்கு மாநிலங்களும் ஒரே மாநிலமாக இணைக்கப்பட்டன.

வங்கத்தின் நலன்களில் அக்கறை காட்டாத (மேற்கு)பாகிஸ்தானின் ஆட்சிக்கெதிராக, வங்க மக்களின் ஒன்றுபட்ட உணர்வுக்கெதிராக, (மேற்கு)பாகிஸ்தானின் உணர்வுகளையும் ஒன்றுபடுத்த என்று இந்த நடவடிக்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானின் அலுவல் மொழியாக வங்க மொழியை ஏற்காமல், வங்க மக்களின்மீது உருது மொழியை திணித்ததற்கெதிரான போராட்டத்தில் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதும், அந்நாள் பன்னாட்டு தாய்மொழி நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதும் இத்தொடரில் 2019 பிப்ரவரி 21இல் இடம்பெற்றுள்ளன. ஒரே மதமாக இருந்தாலும், மொழி, பண்பாடு முதலானவற்றில் வேறுபட்டிருந்த வங்க மக்கள்மீது, (மேற்கு)பாகிஸ்தான் தங்கள் மொழியையும், பண்பாட்டையும் திணிக்க முயற்சித்ததே, பங்களாதேஷ் என்ற தனிநாடு உருவாகக் காரணமாக இருந்தது என்பதை, இன்று ஒரே இந்தியா என்று இந்துப் பண்பாட்டையும், இந்தி மொழியையும் திணிக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் நினைவிற்கொள்ளவேண்டும். விடுதலை பெற்றதும் பாகிஸ்தான் என்ற பெயரையே அந்நாடு தூக்கியெறிந்ததும் கவனிக்கத்தக்கது.

வங்காளம் என்ற பெயருக்கான தெளிவான வரலாறு தெரியவில்லை. இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பொங்கோ என்ற நாடு பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் காணப்படுகிறது. கி.மு.1000 வாக்கில் இப்பகுதியில் பங் என்ற தொடக்ககால திராவிட இனம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இஸ்லாமிய இறையியலில் நோவாவின் பேரனாகக் குறிப்பிடப்படும் ‘பங்’ என்ற பெயருடன், இப்பகுதி அரசர்கள் உருவாக்கிய மணற்குன்றுகளின் பெயரான ‘ஆல்’ என்பது சேர்க்கப்பட்டு பெங்கால் ஆகியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், சோழர்களின் வடஇந்தியப் படையெடுப்புகள் பற்றிய 11ஆம் நூற்றாண்டின் குறிப்புகளில் வங்காளதேசம் என்ற பெயர் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

- அறிவுக்கடல்

;