tamilnadu

img

பொருளாதார கொள்கையில் மாற்றம்கோரி சிஐடியு மாநாடு

வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் பேட்டி

சென்னை, ஜன. 21 - மத்திய அரசின் பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு தேவையான யுத்திகளை சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு வகுக்கும் என்று மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு ஜன.23ஆம் தேதி முதல் 27 தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில்  நடைபெறுகிறது. ஜன.27 அன்று நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி செவ்வாயன்று (ஜன.21) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அ.சவுந்தரராசன் கூறியதாவது: தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், சுரண்டலுக்கு எதிராகவும் சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது.  விவசாயிகள், வர்ததகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. அரசியல் உரிமை களை பாதுகாக்கவும், மதச்சார்பின்மை எனும் மாண்பை பாதுகாக்கவும் போராடுகிறது.

குறைந்தபட்ச ஓய்வூதியம்

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 21 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும், முறைசாரா உள்ளிட்ட அனைத்து துறையைசேர்ந்த  தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடை முறைப்படுத்த வேண்டும், பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும், தொழிற்  சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை போன்றவற்றை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆட்சியாளர்களை வற்புறுத்தி போராடி வருகிறோம்.

பொதுத்துறையை பாதுகாக்க

குறிப்பாக, பொதுத்துறை விற்பனையை எதிர்த்து கடும் போராட்டம் நடத்தி தற்காலிகமாக தடுத்து நிறுத்தி இருக்கிறோம். சேலம் உருக்காலை விற்பனையை போராடி தடுத்துள்ளோம். என்எல்சி பங்கு விற்பனையை மாநில அரசு வாங்கும் நிர்பந்தத்தை ஒன்றுபட்ட போராட்டத்தால் ஏற்படுத்தினோம். இப்படி நாடு முழுக்க சிஐடியு பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மற்ற சங்கங்களை இணைத்து தொடர்ந்து போராடி வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக மத்திய அரசு செயல்படுகிறது. கார்ப்பரேட்டு களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்கிறது. ஆனால், விவசாயிகளின் 80ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. அரசின் பொருளாதார கொள்கையில் மாற்றம் வராவிடில், தற்போது நிலவும் கடுமையான பொருளாதார மந்தத்தை சரிசெய்ய முடியாது. இதனால் ஏற்படும் வேலை இழப்புகளை தவிர்க்க முடியாது. புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியாது. இத்தகைய அம்சங்களை வலியுறுத்தி 16வது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது.

18 அகில இந்திய வேலைநிறுத்தங்கள்

1990ம் ஆண்டிற்கு பிறகு 18 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதில் சிஐடியு முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த ஒவ்வொரு வேலைநிறுத்தத்திலும் 20 கோடி பேர் பங்கேற்பதை உலக முழுவதும் வியப்பாக பார்க்கிறார்கள். இத்தகைய ஒற்றுமையை உருவாக்கிய சிஐடியு மாநாடு என்னென்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தேசிய அளவிலும், உலக தொழிற்சங்க அரங்கிலும் மிகவும் ஆவலோடு எதிர்நோக்குகின்றனர்.

முதலமைச்சர், அமைச்சர்கள்

இந்த மாநாட்டில், தொழிலாளர்களுக்காக போராடிக் கொண்டிருக்கக்கூடிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்போராளிகள் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர். கேரளத்தி லிருந்து 4 அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள், சிஐடியு நிலக்கரி தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவராக உள்ள ஜார்க்கன்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் போன்றோர் பிரதிநிதியாக கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் நிறைவு நாளில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணி சைதாப்பேட்டை தாடண்டர் நகரி லிருந்து துவங்கி பொதுக்கூட்டத் திடலை வந்தடையும். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.கண்ணன், கே.திருச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

பதில் அளிக்க வேண்டாம்

தேசிய  மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்),  தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.  10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தலாம். மற்ற கணக்கெடுப்புகள் மக்களை பிரிக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம். ஆகவே, மக்கள் என்பிஆர், என்ஆர்சி தொடர்பாக மக்கள் பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நீண்ட காலமாக குடியிருக்கும் என்னை நானே இந்திய குடிமகன் என நிரூபிக்க வேண்டும் என்கிறது அரசு. இந்திய குடிமகனா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குதான் உள்ளது.  எனக்கில்லை. நீதி பரிபாலணத்திற்கு எதிராக அரசின் செயல்பாடு உள்ளது.

பெயரை மாற்றி  கொள்ளை

சுங்கச்சாவடிகளில் பாஸ்ட்டேக் போன்று வெவ்வேறு பெயரில் பெயரை மாற்றி மாற்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பது அண்மைக் காலமாக நடக்கிறது. இது மிகப்பெரிய கொள்ளை. சினிமா, விமானம், ரயில், பேருந்து டோல்கேட் என இந்த கொள்ளை நடக்கிறது. இது மக்களுக்கு எதிரான நடவடிக்கை. சாலை போட்டதால் டோல் கட்டணம் என்பது சரியல்ல. அது அரசு நடத்தும் கொள்ளை. வாகனம் வாங்கும்போதே வசூலிக்கப்படும் வரியை கொண்டு சாலை போடுவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும். சாலைக்காக வசூலிப்பதாக வைத்துக் கொண்டால் கூட, 5 ஆண்டுகளில் செலவான பணத்தை எடுத்துவிடுகிறார்கள். ஆனாலும் டோல் வசூலிப்பதை தொடர்கிறார்கள். இந்தியாவின் இதர மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் டோல்களின் எண்ணிக்கையும்,  கட்டணமும் அதிகமாக உள்ளது. இதற்கெதிராகவும் மாநாடு விவாதிக்க உள்ளது.



 

;