tamilnadu

img

வேற்றுமைகளை மறந்து மகா கூட்டணி அமைத்த எதிர்க்கட்சிகள்

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிர மாநிலங்களில், 2014-இல் கிடைத்த பெரும்வெற்றி இந்தமுறை பாஜக-வுக்கு கிடைக்காது என்று கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்நிiலியல், ஜார்க்கண்ட் மாநிலமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.


பாஜக-வுக்கு செல்வாக்கான மாநிலங்களில் ஜார்க்கண்ட் முக்கியமான ஒன்றாகும். இம்மாநிலம் உருவான காலத்திலிருந்தே, பாஜக-வின் கோட்டையாக இருந்து வருகிறது. இதற்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாததும் ஒரு முக்கிய காரணம். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. காங்கிரஸ் கட்சித் தலைமையில் ஒரு வலுவான மகா கூட்டணி அமைக்கப்பட்டு, மாநிலத்தின் 14 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 2019 மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்ட்டில் அநேகமாக பாஜக துடைத்து எறியப்பட்டு விடும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


இதற்கு முன்பு 2004-இல் இதேபோல் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு காங்கிரஸ் கட்சித் தலைமையில் தேர்தலைச் சந்தித்தபோது, பாஜக-விற்கு மொத்தம் உள்ள 14 இடங்களில் ஒரேயொரு இடம்தான் கிடைத்தது. அதற்குப் பிறகு, இப்போதுதான் எதிர்க்கட்சிகள் மீண்டும் மகா கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன என்பதால், 2004இல் ஏற்பட்ட கதிதான் இப்போதும் பாஜகவுக்கு ஏற்படும் என்று தேர்தல் வாக்களிப்பியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.  


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் தவிர ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), ஜார்க்கண்ட் விகாஷ் மோர்ச்சா (பிரஜா தந்ரிக்), ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கணிசமான பலத்துடன் செயல்படுகின்றன. இம்மூன்று கட்சிகளும் இப்போது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

ஏப்ரல் 29, மே 6, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக, இம்மாநிலத்தின் 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் - 7, ஜேஎம்எம் - 4, ஜேவிஎம் (பி) - 2 மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 என தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டு போட்டியிடுகின்றன.  

பாஜக, அம்மாநிலத்தில் செயல்படும் அகில ஜார்கண்ட் மாணவர் யூனியன் அமைப்புடன் சேர்ந்து போட்டியிடுகிறது. பாஜக 13, மாணவர் யூனியன் 1 என இடங்களைப் பங்கிட்டுக் கொண்டுள்ளன.


ஜார்க்கண்ட் மாநிலம் 2000-ஆம் ஆண்டு நவம்பர் 15-இல்தான் பீகாரிலிருந்து தனி மாநிலமாக உதயமானது. அந்த சமயத்தில் பாஜகவே இந்தப் பிராந்தியத்தில் வலுவாக இருந்தது. 

தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் வரும் பகுதிகளில், 1991-இல் நடைபெற்ற தேர்தலின்போது ஜனதா தளமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து கூட்டணி வைத்து போட்டியிட்டபோதிலும் பாஜக 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த சமயத்தில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.

அதன்பின்னர் 1996, 1998 மற்றும் 1999 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை பாஜக துடைத்தெறிந்தது. மூன்று தேர்தல்களிலும் முறையே 12, 13, 12 என்று பாஜக வெற்றி பெற்றது.2009-இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னரும்கூட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் கையே ஓங்கியிருந்தது. மொத்தம் உள்ள 14 இடங்களில் எட்டு அதன் வசம் இருந்தது.


2014 தேர்தலில் மொத்தம் உள்ள 1 கோடியே 27 லட்சத்து 92 ஆயிரத்து 13 செல்லுபடியான வாக்குகளில் 52 லட்சத்து 7 ஆயிரத்து 439 வாக்குகளைப் பாஜக பெற்றது. அதாவது 40.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. நான்கு எதிர்க்கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு மொத்தம் 36.8 சதவிகித வாக்குகளைப் பெற்றன. பாஜக 12 இடங்களில் வெற்றிபெற, ஜேஎம்எம் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன.


எனினும், மோடி அலை வீசப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த சமயத்திலேயே, பல இடங்களில் கடும் சிரமத்திற்கு இடையேதான் பாஜக வெற்றிபெற்றது. 

கோட்டா என்னும் தொகுதியில், காங்கிரசை விட பாஜக கூடுதலாக பெற்றது 60 ஆயிரத்து 82 வாக்குகள்தான். அப்போது, ஜேவிஎம்(பி) கட்சி தனியாக நின்று பெற்றது மட்டும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 506 வாக்குகள்.


அதேபோன்று, கிரிதி தொகுதியில், ஜேஎம்எம் கட்சியைக் காட்டிலும் 40 ஆயிரத்து 313 வாக்குகள் அதிகம் பெற்று, பாஜக வெற்றி பெற, ஜேவிஎம்(பி) தனித்து நின்று 57 ஆயிரத்து 380 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜாம்ஷெட்பூரில், ஜேவிஎம்(பி) கட்சியை சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்கடித்திருந்தது. ஆனால், இத்தொகுதியில் ஜேஎம்எம் கட்சிக்கு 1 லட்சத்து 38 ஆயிரத்து 109 வாக்குகளை பிரித்திருந்தது.


இதேபோன்றே லோகர்தாகா தொகுதியில் வெறும் ஆறாயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் காங்கிரசை பாஜக வென்றது. எனவே, இந்தத்தடவை நான்கு எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்திருப்பதால், ஜார்க்கண்ட்டில் பாஜக அநேகமாகத் துடைத்தெறியப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. போதாதற்கு, 2014-இல் இருந்தது போன்று மோடி அலையும் இப்போது அறவே இல்லை என்பது முக்கியமானது.


இவையெல்லாவற்றையும் விட, மாநிலத்தின் பல்வேறு எரிகிற பிரச்சனைகளை மகா கூட்டணி கையில் எடுத்துக்கொண்டு போட்டியிடுவதால் மக்களின் மகத்தான ஆதரவு இக்கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஆட்சியாளர்கள் விவசாய நிலங்களை, விவசாயம் அல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்துவதற்காகக் கொண்டுவந்துள்ள சட்டங்களை எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்க்கின்றனர். இது விவசாயிகளின் மனதைக் நன்கு கவ்விப் பிடித்திருக்கிறது.


அதேபோன்று பழங்குடியினர் நிலம் விஷயத்தில் பாஜக செய்துவரும் துரோகங்களும் அக்கட்சியின் மீது பழங்குடியினருக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 

அதிகரித்துள்ள வேலையின்மை, வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு, மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், ஆளும் பாஜகவினர் கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்து வருவதற்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியனவும் மகா கூட்டணியினருக்கு நல்ல வாய்ப்புகளாக அமைந்துள்ளன.

எனவே, இந்தத் தேர்தலில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக அநேகமாக மண்ணைக் கவ்வுவது திண்ணம் என்றே தேர்தல் வாக்களிப்பியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.


(ஆதாரம்: தி இந்து)

தமிழில்: ச. வீரமணி


;