tamilnadu

img

வெல்வதற்கரியவர்கள் எவருமில்லை.... தோழர்கள் கே.தங்கவேல், கே.சி.கருணாகரன் படத்திறப்பு விழாவில் க.கனகராஜ் பேச்சு...

கோயம்புத்தூர்:
மக்கள் திரளுக்கு முன்னாள் வெல்வதற்கரியது என்பது ஏதுமில்லை என தோழர்கள் கே.தங்கவேல், கே.சி.கருணாகரன் படத்திறப்புவிழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோயம் புத்தூர் மாவட்ட  மறைந்த முன்னாள்  செயலாளர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுமான கே.தங்கவேல், கே.சி.கருணாகரன் ஆகியோரது படத்திறப்பு மற்றும் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று கோவையில் நடைபெற்றது.கட்சியின் கோவை பீளமேடு நகரக்குழுவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கட்சியின்மாவட்டச் செயலாளர்  வி.இராமமூர்த்தி தலைமைதாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். கட்சியின் மூத்த தலைவர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, என்.வி.தாமோதரன் முன்னிலை வகித்தனர். மறைந்த தலைவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநி
லக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.அமிர்தம் ஆகியோர் உரையாற்றினர்.

மறைந்த தலைவர்கள்  கே.தங்கவேல்,  கே.சி.கருணாகரன் ஆகியோரது உருவப்படங்களை திறந்து வைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்  சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில், உன்னத லட்சியத்திற்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த கட்சியின் முழு நேர ஊழியர்களின் தியாகம் அர்ப்பணிப்பு மிக்கது. அரை நூற்றாண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்களாக தோழர்கள் கே.சி.கருணாகரன் அவர்களும், தோழர் கே.தங்கவேல் அவர்களும்பணியாற்றி உள்ளனர் என்பது எளிதான ஒன்றல்ல.இதனைக்காட்டிலும் இத்தகைய முழு நேர ஊழியர்களின் குடும்பத்தினரின் தியாகம் அளப்பரியது. இத்தலைவர்களின் எளிமை, நேர்மை  என்பது கம்யூனிஸ்ட்டு
களின் குணாம்சங்களில் ஒன்றாகும்.

உலகம் தற்போது மிகப்பெரிய பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அமைப்பால் இதனை எதிர்கொள்ள முடியாது என்பது மீண்டும் ஒரு முறை தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்பேர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். உலகத்தின் தண்டல்காரன் என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா இப்பேரிடரை எதிர்கொள்ள முடியாமல்தவித்து வருகிறது. அதே நேரத்தில் சோசலிசத்தை நோக்கி முன்னேறுகிற நாடுகளான 140 கோடி மக்கள்தொகையைகொண்ட சீன தேசம் கொரோனா தொற்றின் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைத்துள்ளது மட்டுமல்லாமல் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிட்டது.  சின்னஞ்சிறிய வியட்நாம் கொரோனாவில் இருந்து அம்மக்களை பாதுகாக்க அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்குகிறது. இலவச அரிசி ஏடிஎம்களை பொருத்தியுள்ளது. 

அமெரிக்காவால் 56 முறை பொருளாதார தடைகளை எதிர்கொண்ட கியூபா, தொழிலாளி வர்க்க குணத்தோடு இயற்கை பேரிடர், நோய் பேரிடர் அனைத்தையும் எதிர்கொள்ளும் வல்லமை படைத்ததாக இருக்கிறது. இவையெல்லாம் தனிமனித நல்லெண்ணத்தில் உருவானதல்ல; அமைப்பின் நல்லெண்ணத்தால் உருவானவை.  தற்போது உலகத்தில் வலதுசாரிகளின் கைகள்விரிந்து வருவதும், இந்தியாவில் பாஜகவின் கரங்கள் நீளுவதும் குறித்து சிலர் கவலை கொள்கின்றனர். ஆனால் மக்களின் எழுச்சிக்கு முன்னாள் வெல்வதற்கரியவர்கள் என்று எவருமில்லை. அத்தகைய வரலாற்றுஅனுபவத்தை பொலிவியா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் போராட்டம் கற்றுக்கொடுத்துள்ளது. தலைநகர் தில்லிக்கு விவசாயிகளை அனுமதிக்க மாட்டோம் என மோடி அரசு சொன்னது. தில்லிக்குள் எங்களை அனுமதிக்கவில்லையென்றால் தில்லியில்இருந்து யாரும் வெளியே வரமுடியாது என ஐந்துமாநில எல்லைகளிலும் விவசாயிகள் பேரெழுச்சியோடு சாலையிலேயே போராட்டம் நடத்தினர். தடியடி, கண்ணீர் குண்டு வீச்சு என அனைத்தையும் எதிர்கொண்டு தடைகளை உடைத்து உறுதியாக நின்றனர். இப்போது அமித்ஷா வகையறாக்கள் தில்லிக்குள்அனுமதித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை தலைநகர்தில்லியில் இருந்து திரும்ப மாட்டோம் என விவசாயிகள் சூளுரைத்துள்ளனர். மக்களின் எழுச்சிக்கு முன்பு வெல்வதற்கரியவர்கள் என்று எவருமில்லை என்பதை இத்தகைய போராட்டங்கள் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளன.  

புரட்சி என்பது மக்களின் திருவிழா என மாமேதைலெனின் வர்ணிப்பார். அத்தகைய திருவிழாவிற்கு மக்களை தயார்ப்படுத்தும் வேலையை செய்வது கம்யூனிஸ்ட்டுகளின் கடமை. சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பினால் நம்மை யாராலும் புறக்கணிக்க முடியாது. இந்துத்துவ வலதுசாரிகளை எதிர்ப்பது என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கையோடு சம்பந்தப்பட்டது அல்ல. தத்துவார்த்த ரீதியாக, ஸ்தாபன ரீதியாக மக்களை திரட்டுகிற போதுதான்இத்தகைய சக்திகளை முறியடிக்க முடியும். மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கிற வர்க்க சுரண்டலற்ற, தலித், பழங்குடியின, பெண்கள் மற்றும் மதச்சிறுபான்மையோர்களின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான சோசலிசமே நமது குறிக்கோள். அத்தகைய அணி திரட்டலுக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே மறைந்த நமது தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தீக்கதிர் சந்தா
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளிதழின் முதற்கட்ட 406 சந்தாவிற்கான 5 லட்சத்து 65 ஆயிரத்து 800 ரூபாய் காசோலையை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் கட்சியின் கோவைமாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் வழங்கினார்.இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன், ஏ.ராதிகா, மாவட்ட தலைவர்கள்எஸ்.கருப்பையா, வி.பெருமாள், ஆர்.வேலுசாமி, என்.ஜெயபாலன், கே.மனோகரன், என்.பாலமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில் பீளமேடுநகரக்குழு செயலாளர் கே.பாண்டியன் நன்றி கூறினார்.

;