tamilnadu

img

வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டின் இளநிலை வேளாண் பொறியியல் மற்றும் தோட்டக்கலைத் துறை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி இளநிலை வேளாண் பொறியியல் மற்றும் தோட்டக்கலைத் துறை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை  இன்று வெளியிட்டார். தரவரிசை பட்டியலில், திவ்யா, ஷர்மிளா, மவுரின், நவீனா ஆகிய 4 மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 33,973 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 29,969 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் 11,447 பேர் மாணவர்கள் மற்றும் 18,522 பேர் மாணவிகள் ஆவர்.
மேலும் நடப்பாண்டு 318 மாணவர்கள் 195 கட் ஆப் மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த தரவரிசை பட்டியலில் 10,053 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதில் 413 பேருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டப்படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 22ஆம் தேதி பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேளாண் சார்ந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 245 மாணவர்களும், என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டின் கீழ் 245 இடங்களும் நிரப்ப இருப்பதாக துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.