tamilnadu

img

சாலையோரம் பிறந்த குழந்தை  - பிரசவம் பார்த்த ஆட்டோ ஓட்டுநர்

கோவை, ஏப்.18 - பிரசவ வலியால்   பெண் துடித்த நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ,  சாலையிலேயே ஆட்டோ ஓட்டுனர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லே அவுட்  பகுதியில்  ஒடிசா  மாநிலத்தவர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். ரயில்வே கேட் அருகே கூடாரம் அமைத்து வசித்து வரும் இவர்கள் இங்கு கிடைக்கும் பணிகளை செய்து வருகின்றனர். இங்கு ஆனந்த் மற்றும் அவரின் நிறைமாத கர்ப்பிணியான பாலாதேவி ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாலாதேவிக்கு வெள்ளியன்று மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பெண்ணை தூக்கி வரும் போது பெண் பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அந்த பெண்ணை உட்கார வைத்து விட்டு ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியரும், எழுத்தாளரும், ஆட்டோ ஓட்டுனருமான சந்திரன் இத்தகவலை தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட நிலையில் பெண்ணுக்கு அங்கேயே பிரசவம் ஆனது. 108 ஆம்புலன்ஸ்  வருவதற்குள் சாலை ஒரத்திலேயே பெண்ணுக்கு  குழந்தை பிறந்தது. உடனடியாக  சந்திரன் தனக்கு உள்ள அனுபவத்தின் வாயிலாக இப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட அந்த ஊழியர்களின் உதவியுடன் தொப்புள் கொடியை துண்டித்து தாய்,சேய் இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். இந்த காட்சிகளை சம்பவ இடத்தில் இருந்த நபர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில்  பதிவிட்ட  நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி  வருகின்றது.     
முன்னதாக , ஆட்டோ ஓட்டுனரான எழுத்தாளர் சந்திரன் இயற்கை பிரசவம் குறித்து அழகு என்கிற கட்டுரை தொகுப்பை ஏற்கனவே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

;