tamilnadu

img

என்டிசி ஆலைகளை திறந்து இயக்கிட வேண்டும்.... நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை....

கோயம்புத்தூர்:
மூடப்பட்டுள்ள என்டிசி ஆலைகளை திறந்து நடத்திட வேண்டும் என கோவை வந்த நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் மனுக்களை அளித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பத்ருகவி  தலைமையிலான தொழிலாளர் நிலைக்குழு புதனன்று கோவை வந்துள்ளது. இந்தக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எளமரம் கரீம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயன்,  திமுகவின் மு.சண்முகம் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளா ர்கள்.  இந்தக் குழுவினரிடம் கோவையிலுள்ள பஞ்சாலைத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர்களான ஐஎன்டியுசி துணைப் பொதுச் செயலாளர் வி.ஆர்.பாலசுந்தரம், ஏஐடியுசி பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம்,சி.சிவசாமி, எச்எம்எஸ் தலைவர்டி.எஸ்.ராஜாமணி, பி.கோவிந்த ராஜன், சிஐடியு தலைவர் சி.பிரான்சிஸ்சேவியர், எம்எல்எப் தலைவர் எம்.தியாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது; இந்தியாவில் 1974ஆம் ஆண்டு 123 மில்கள் தேசியமயமாக்கப்பட்டன. அதில் தற்போது 23 மில்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அதில் ஏழு மில்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் சுமார் 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.  கடந்த ஆண்டு முதல் இந்த ஏழு மில்களும் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதில் தற்போது கோவையில் உள்ள ரங்க விலாஸ் மில்,  காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரா பி மில்லும் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற மில்கள் இயக்கப்படவில்லை. இதனால் தொழிலா ளர்கள் வேலையிழந்து தவிப்பிற்கு  ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு தற்போது 50 சதவிகிதம் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.  

எனவே, இந்த மில்களை திறந்து தொடர்ந்து இயக்க வேண்டும். இதற்கான நிதி என்.டி.சி. நிறுவனத்திடமே உள்ளது. இந்த நிதியை வைத்தே தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்தமான பஞ்சாலைகளை தொடர்ந்து நல்ல முறையில் இயக்க முடியும். இதன்மூலம் தொழிலாளர்களும் பயன்பெறுவர். அரசுக்கும் வருமானம் கிடைக்கும். எனவே, இந்த பஞ்சாலைகள் திறந்து தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

சிஐடியு மனு
இதேபோன்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்தும், அதில் தலையிட வேண்டிய அம்சங்கள்குறித்தும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

;