tamilnadu

img

பொள்ளாச்சி : அரசு மருத்துவமனையில் 4 நாளே ஆன பச்சிளம்  குழந்தை கடத்தல்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த யூனுஸ் -  திவ்யபாரதி தம்பதியினர். அதே பகுதியில் கறிக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திவ்ய பாரதியின்  இரண்டாவது பிரசவத்திற்காக பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில்   கடந்த ஜூன் 27ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு கடந்த 29 அன்று சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறன்று அதிகாலை 4 மணியளவில் திவ்யபாரதி விழித்து பார்த்தபோது தனது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது  அதே வார்டில் சிகிச்சை பெற்று வரும் பெண் நள்ளிரவு 2 மணியளவில் தான் கழிப்பறைக்கு சென்றபோது,  2 பெண்கள் உள்ளே வந்து சென்றதாக தெரிவித்துள்ளார். உள்ளே வந்த அந்த இரண்டு பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
இதன் பின்னர்  தகவலறிந்து வந்த திவ்யபாரதியின் கணவர் யூனுஸ் மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டனர். இதனால் மருத்துவமனை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) செல்வராஜ் மற்றும் வால்பாறை சரக காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணையை தொடங்கினர். 
மேலும் இது தொடர்பாக பொள்ளாச்சி அரசு  மருத்துவமனையில் பணியில் இருந்த  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்  , பாதுகாவலர்கள் ஊழியர்கள் என அனைவரிடமும்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள  வணிக வளாகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடே குழந்தை காணாமல் போனதற்கு காரணம் என்று குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

;