tamilnadu

img

குளத்தை பிரித்து குறுக்கே சாலை

கோயம்புத்தூர்:

நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் பாட்டில்களில்தான் நீரை பார்க்க முடியும். நீர்நிலைகள், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என இம்மாத துவக்கத்தில் தான் முதல் வாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிற்கு உத்தரவு பிறப்பித்தது.


இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியிலேயே, அதுவும் அவரது வீட்டிற்கு எதிரே உள்ள கோவை செங்குளத்தின் நடுவே, விதிமுறைகளை மீறி குடிசை மாற்று வாரியம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை குனியமுத்தூர் அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் அமைந்துள் ளது. இந்த குளத்திற்கு நீர் வரத்து நொய்யல் நதியில் இருந்து வாய்க்கால் மூலமாக வந்து சேரும். இந்த குளம் நிரம்பிய பின்னர் உபரிநீர், குறிச்சி குளத்திற்கு சென்றடையும். இந்த குளத்தினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த குளத்தில் கடந்த சில ஆண்டு களாக கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப் பட்டதால் குளம் முற்றிலும் மாசடைந்தது. இதனையடுத்து 2017ம் ஆண்டு அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுமார் ரூ.5 லட்சம் செலவில் தாங்களே பணம் போட்டு இந்த குளத்தை சுத்தம் செய்தனர். 


இந்நிலையில், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குளத்துப்பாளையத்தில் ரூ. 57 கோடி மதிப்பீட்டில் 6.5 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவங்கி வைத்தார். செங்குளமும் அவர் குடியிருக்கும் வார்டு பகுதிக்கு உட்பட்டே இருக்கிறது. 

இந்த பணிக்கான ஒப்பந்தத்தை ஜெஎஸ்ஆர் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டுமான இடத்திற்கு குளத்துப்பாளையம், நேதாஜி நகர் சாலை வழியாக செல்ல வேண்டும். அதாவது கூடுத லாக 3 முதல் 4 கி.மீட்டர் சுற்றி செல்ல வேண்டும்.


ஆனால் செங்குளம் கண்மாய் வழியாக சென்றால் 2 கி.மீ. குறையும் என்பதற்காக குளத்தின் நடுவே சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த குடியிருப்பிற்காக தோண்டப்பட்டிருக்கும் மலை போன்ற மண் முழுவதும் அந்த குளத்திற்குள்ளேயே கொட்டப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் சாலையை பயன்படுத்தாமல் புதியதாக சாலை போடுவதன் நோக்கம் என்ன ? கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து மொத்தமாக நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதன் முதல் படியே இந்த வேலை என அப்பகுதியில் இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


செங்குளம் கண்மாய் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது ஆகும். இந்த குளத்தில் எந்த பணி செய்ய வேண்டு மென்றாலும் அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரப்பூர்வமாக அனுமதியளிக்க வேண்டும். ஆனால் எந்தவித அனுமதியும் பெறாமல் தற்போது ஜெஎஸ்ஆர் கட்டுமான நிறுவனம் செங்குளத்தின் நடுவே சாலை அமைத்து வருகிறது. குறிப்பாக குளத்திற்கு வரும் தண்ணீர் வெளியேறும் பகுதியை மறைத்து சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. 


தற்காலிக சாலையாம்!

செங்குளத்தின் நடுவே சாலை அமைக்கப்படுவது குறித்து பொதுப்பணித் துறை சிறப்பு திட்ட இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறுகையில், குளத்தின் நடுவே சாலை அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. குளத்தில் நிரந்தர சாலை அமைப்ப தற்கான பணிகளும் நடைபெறவில்லை. குடிசை மாற்று வாரிய பணிகள் விரைந்து நடப்பதற்காக தற்காலிக மண் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் குளம் நிரப்பும் வகையில் தற்காலிக மண் சாலையினை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக, நிரந்தர சாலை அமைப்பதற்கான பணிகள் நடந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.


அமைச்சர் தரப்பு விளக்கம்

இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தொடர்பு கொண்டோம். அவரது உதவியாளர் சந்தோஷ் பேசினார். “செங்குளம் கண்மாய் விஷயம் எங்களுக்கும் வந்தது. ஜெஎஸ்ஆர் கட்டுமான நிறுவனம் சாலை அமைக்கவில்லை. அது தவறான தகவல். லாரிகள் செல்வதற்காக தற்காலிகமாக இரண்டு கான்கிரீட் குழாய்கள் போட்டு மண் போட்டிருக்கிறார்கள் அவ்வளவு தான்” என்றார். 


பின்னணி என்ன ?

பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜெஎஸ்ஆர் கட்டுமான நிறுவனம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலு மணிக்கும் மிகவும் நெருக்கமான நிறுவனம். இந்த நிறுவனம் ஏற்கனவே சென்னை மாநகரத்தின் சாலைகளை பராமரிக்கும் பணிகளை செய்து வந்தது. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செங்கல்பட்டு- காஞ்சிபுரம்- அரக்கோணம்- திருத்தணி சாலை பணி களையும் மேற்கொண்டு வந்தது. தமிழகத்தில் தற்போதும் பல்வேறு பணிகளை எடுத்து செய்து வருகிறது. இந்த நிறுவனம் அமைச்சர்களை கவனிக்கும் விதமே தனி.  


அதனால் அமைச்சர்களுக்கும் இந்த நிறுவனத்துடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். அதனால் இந்த நிறுவனத்திடம் இந்த விதிமுறை, அந்த விதிமுறை என்று சொல்லி அவர்கள் பணியில் நாங்கள் தலையிட முடியாது. அப்படி தலையிட்டால் நாங்கள் வேறு இடத்திற்கு உடனே மாற்றம் செய்யப்படுவோம். இந்த சாலை அமைப்பது உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளுமே அமைச்சர்கள் வரை தெரியும் . அதனால் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடி யாது. ஒரு வேளை அமைச்சர்கள் அழைத்துச் சொன்னால் அடுத்த நிமிடமே அந்த சாலையை அகற்றிவிடுவோம்” என்று கூறினார்.


காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவுப்படி குளம் உள்ளிட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். ஆனால் அரசுத்துறையின் மூலம் நடைபெறும் பணியே நீர்நிலையை ஆக்கிரமித்து சாலை அமைத்திருப்பது மோசமான செயல்பாடு. நீர் தேக்க பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும். அரசும், அரசு அதிகாரிகளும் சட்டத்தை மதிப்பதில்லை என்பதற்கு இந்த செயல்பாடே உதாரணம்.

;