tamilnadu

img

கோவைக்கு 3 புதிய காவல் நிலையங்கள்.. முதலமைச்சர் உத்தரவு..!

 கோவை மாநகரில் புதிதாக மூன்று காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி அதிகாலை கார்  வெடிப்பு சம்பவம்  நடைபெற்றது. இது கோவை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து மாநகர போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கோவையில் அமைதியை உறுதிப்படுத்த காவலர்கள் ஆங்காங்கே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம் வின்சென்ட் சாலையில் சாலையோரத்தில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், கார் வெடித்த வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும், கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் கரும்புக்கடை பகுதியானது உக்கடம் காவல் நிலைய எல்லைக்குள் இருந்து வருகிறது. சுந்தராபுரம் பகுதியானது குனியமுத்தூர் காவல் நிலையம் எல்லைக்குள் உள்ளது.

கவுண்டம்பாளையம் பகுதியானது சாய்பாபாகாலனி மற்றும் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. தற்போது இந்த மூன்று பகுதிகளிலும் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதால் போலீசாரின் பணிச்சுமை குறைவதோடு, எந்தவித குற்றச்சம்பவங்கள் நடைபெற்றாலும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவக்க முடியும்.

இதே போல் சூலூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள நீலாம்பூர் பகுதியில் தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று  நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

;