tamilnadu

img

இ-சேவை மைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக

உதகை, மே 31-அரசு இ-சேவை மையங்களில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தலைமையில் வெள்ளியன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் இயங்கிவருகின்றன. இதில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஊழியர்களிடம் சட்ட விரோதமாகப் பிடித்தம் செய்த சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும். நிர்வாகச் சீர்கேட்டினை சரி செய்ய வேண்டும். இணைய சேவையை முடக்கி பொதுமக்களை அலைக்கழிப்பதைக் கைவிட வேண்டும். இ-சேவை மைய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில்தேவையான பேப்பர், டோனர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். இ-சேவைமற்றும் ஆதார் சேவை மையங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் வெள்ளியன்று பல்வேறு இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையம் முன்புசிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் வாழ்த்திப் பேசினார். நிறைவாக டாஸ்மாக் ஊழியர் சம்மேளனக்குழு உறுப்பினர் நவீன் சந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். 

நாமக்கல்

நாமக்கல் பூங்கா சாலை அருகில் யூனியன் ஆப் ஐடிஎம் ஐடிஇஎஸ் எம்ப்ளாயீஸ், இ-சேவை மற்றும் ஆதார் சேவை ஊழியர்கள்  சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.சபரீஸ் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் கோகுல் வரவேற்புரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க செயலாளர் ராமசாமி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் பூங்கொடி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க கோட்ட உதவிச் செயலாளர் வி.செந்தில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் ப.ராமசாமி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். முடிவில் சிஐடியு மாவட்டசெயலாளர் ந.வேலுசாமி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். மாவட்ட ஒருகினைப்புகுழு உறுப்பினர் ஜாஸ்மீன் நன்றியுரையாற்றினார்.

திருப்பூர்
 

திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக வெள்ளியன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஒய்.அன்பு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பாக்கியம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இதில்இ-சேவை மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.