tamilnadu

img

நீரிழிவு நோய்

நாகரிக மனிதன் இயற்கையின் இரகசியத்தை அறிந்துகொண்டு, அதன்படித் தன் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருப்பது உண்மைதான். இதனால் தான் அவனை அச்சுறுத்தும் வியாதிகளைக் கட்டுப்படுத்தியும் சில சமயம் ஒழித்தும் வாழ்க்கை நடத்த முடிகிறது.மனிதனுக்கு வரும் நோய்கள் முக்கியமாக இரண்டு வகைப்படும். ஒன்று தொற்று நோய். இரண்டாவது உடல்உறுப்புகளின் மாறுப்பட்ட செயல்களினால் வருவது. 20ஆம் நூற்றாண்டு அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாகத் தோன்றியுள்ள தடுப்பு முறை ஊசிகள், மருந்துகள், கிருமி நாசினிகள் போன்றவற்றால் இவை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன் விளைவாக இன்று மனிதன் உயிர்வாழும் சராசரி ஆண்டுகள் கூடக் கூடியுள்ளன. ஆனால் அதே சமயம் நாகரிகத்தின் முன்னேற்றத்தினால் இன்று இரத்தக்கொதிப்பு, புற்றுநோய் மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகமாகி உள்ளன. இந்நோய்களைப் போலவே மனிதனுக்கு நாகரீகம் தந்த பரிசுதான் நீரிழிவுநோய்.இந்நோய் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருவதோடு புத்திசாலிகளையும் ஆக்கப்பூர்வமாகச் செய்பவர்களையும் அதிகம் தாக்கி வருவது என்பது குறிப்பிடற்குரியது. இந்நோய் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மிக அதிகமாக உள்ளது.

இந்நோய் உடலில் உள்ளதோ என்று சுலபமாகக் கண்டுபிடித்து மருத்துவம் பெற முடியும் என்ற நிலை இருப்பினும் எத்தனையோ இலட்சம் பேர் தம் நோயைக் கண்டுபிடித்து வேண்டிய மருத்துவம் செய்து கொள்ளாது இருக்கின்றனர். அப்படி மருத்துவம் பெறாதவர்கள் தங்கள் நோயைத் தீவிரப்படுத்திக் கொள்வதுடன் அதனால் வரும் பல விளைவுகளையும் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர்.இந்நோய்க்கான மருத்துவம் இப்பொழுது எவ்வளவோ முன்னேறியுள்ளது. எனினும் அதன் பலனை முழுமையாக அடைய வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பெற வேண்டும்.

நீரிழிவு நோய் நமக்கு ஒரு புதிய நோய் அல்ல. மருத்துவ மேதைகள் சுச்சுருத்தாவானாலும் சரி, ஹிப்பாகரடீஸ் ஆனாலும் சரி, இந்நோயைப் பற்றிக் கூறாதவர் இல்லை. அப்படி இருந்தும் இன்னும் இந்நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. சில சமயம் பாரம்பரியமும் ஊளைச் சரீரமும் இந்நோய் வரக்காரணங்களாகின்றன நீரிழிவு நோய் ஒரு தொற்றுநோய் அன்று. உடலில் நாளமில்லாச் சுரப்பிகள் உடலைமைப்பிற்குத் தக்கவாறு சரிவர வேலை செய்யாததன் விளைவாக இந்நோய் வருகிறது. இதனால் உடலுக்கு வேண்டிய சர்க்கரைச் சத்து உணவிலிருந்து அளவோ அல்லது சரியாகவோ பயன்படாது அதிகச் சர்க்கரை இரத்தத்தில் இருக்கும். இதுவே ஒரு அளவுக்கு மேல் செல்லும்பொழுது சர்க்கரையைச் சிறுநீரகம் அதிகம் வெளியேற்றுகிறது. இத்துடன் உப்புகளும் மற்றும் வைட்டமின்களும் வெளியேறுகின்றது. இந்நோய் சில சமயங்களில் மாறுபடும்பொழுது இரத்தத்தில் மட்டும் சர்க்கரை அதிகமாகி சிறுநீரில் வராது. அல்லது சிறுநீரில் சர்க்கரை இருந்து இரத்தத்தில் இராது.உடலின் தேவைக்கு மேல் இரத்தத்தில் அதிகச் சர்க்கரை இருக்கிறது. என்றால் அதற்குக் காரணம் உடலின் கணையம் சுரக்கும் இன்சுலின் பற்றாக்குறையேயாகும். அதாவது 1. போதிய அளவு சுரக்காமை, 2. போதிய அளவு சுரந்தாலும் உடலுக்குத் தேவையான அளவு இரத்தத்தில் சேராமை. 3. உடலுக்கு இன்சுலின் தேவை அதிகமாதல், 4. அல்லது சுரந்த இன்சுலின் உடல்திசுக் களால் பயன்படுத்திக் கொள்ள முடியாமை போன்றவையாகும்.

ஒருவருக்கு நீரழிவு நோய் உள்ளதா என்று எப்பொழுது சந்தேகப்பட வேண்டும்?

உடலிலும் மனத்திலும் விவரிக்க முடியாத சோர்வு, பலவீனம், அதிகப்பசி, நாவறட்சி, தாகம் போன்றவை உண்டாகும். சிறுநீர் அதிகத்தடவை. அதிக அளவில் அளக்க முடியாமல் கூடப்போகும். அதிகம் சாப்பிட்டாலும் உடல்மெலியும். பார்வைக்கோளாறு ஏற்பட்டு, அடிக்கடி பார்வைக்கான கண்ணாடி மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். உடல்வலியுடன் அடிக்கடி சளிபிடித்து, உடலில் சீழ்க்கட்டி வரும். ஆண் உறுப்பில் அழற்சி, ஆண் தன்மை குறைவு, பெண் உறுப்பில் அரிப்பு ஆகியவை உண்டாகும். நோயின் ஆரம்பத்தில் எந்தவித அறிகுறிகளும் இராது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவரிடம் செல்லும்பொழுது தற்செயலாக இந்நோய் கண்டுபிடிக்கப்படுவது உண்டு. நோயின் அறிகுறிகள் வந்த பின் நோய் கண்டுபிடிக்கப்பட்டால் நோய் முற்றிய நிலையில் உள்ளது என்பதே பொருள். ஒரு குடும்பத்தில் சர்க்கரை நோய் யாருக்காவது இருந்தால் சிறுநீரை உணவு உண்ட 3 மணி நேரம் கழித்துச் சோதனை செய்து சரிபார்த்துக் கொள்வது நல்லது. அப்படி நீரில் சர்க்கரை இல்லையென்றால், 35 வயதிற்கு மேல் வருடம் இரு முறையேனும் இரத்தச்சோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

யார் யாருக்கு இந்நோய் வரும்? பொதுவாக ஆண்களுக்குத்தான் இது அதிகம் வருகிறது. மேலும் எந்த வயதினருக்கும் இந்நோய் வரக்கூடும். நகரத்தில் வசிப்போருக்கும் ஓடியாடாது உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும், உடல்பருமன் உள்ளவர்களுக்கும் தான் இந்நோய் அதிகம் வருகிறது. சாதாரணமாக 100க்கு 90 சதவிகிதம் சிறுநீரின் சோதனை மூலம் இந்நோய் கண்டுபிடிக்கப் படுகிறது. இந்நோய் ஒருவருக்கு உள்ளதா என்று கண்டறிய அவர் உணவருந்திய இரண்டு மணி நேரங்கழித்துச் சிறுநீருடன் இரத்தச் சோதனையும் செய்து பார்க்க வேண்டும்.இச்சோதனைகளில் இந்நோயைப் பற்றிச் சந்தேகம் இருப்பின் ஜி.டி.டி (ழு.கூ.கூ) என்ற சோதனையைச் செய்ய வேண்டும். இதற்கு நோயாளி 12 மணி நேரம் உணவருந்தாது இருந்த பிறகு சிறுநீரையும் இரத்தத்தையும் சோதனை செய்வார்கள். பிறகு குளுகோஸ் 50 கிராம் கொடுத்து அரை மணிக்கு ஒரு முறை என 5 முறை இரத்தத்தையும் சிறுநீரையும் சோதனை செய்து இந்நோயைக் கண்டுபிடிப்பார்கள்.இந்தச் சோதனை மூலம் இந்நோயை மருத்துவர், குறைந்தது - இடைப்பட்டது - அதிகம் என்று மூன்று வகைப்படுத்துவார். இதைத் தவிர இந்நோயை நோயாளிகள், வயது வந்த நோயாளிகள் என்று வகைப்படுத்துவதும் உண்டு. இம்மாதிரி வகைப்படுத்துதல் மூலம் மருத்துவர் நோயாளிக்குச் சரியான மருத்துவம் அளிக்க முடிகிறது. ஏனெனில் நீரழிவு நோய்க்குச் சரிவர மருத்துவம் அளித்தால் அது வளமுடன் வாழ வழியை உண்டுபண்ணும் ஒரு நோய் என்று மருத்துவர் கூறுவர். ஆகவே நோயாளிகள் இந்நோயால் வரும் விளைவுகளை அறிந்திருந்தால் தக்க சமயத்தில் அதைத் தடுக்கவும் நீண்ட நாள் வாழவும் வாய்ப்பும் உண்டு.

இந்நோயினால் விளையும் கேடுகள்

சர்க்கரை உடலில் அதிகமாகும் பொழுது இராஜபிளவை வரும். ஆழ்ந்த மயக்கம் கூட வரும். இரத்த ஓட்டம் குறைந்தது இரத்தக் குழாய்கள் தடித்து, கை, கால் விரல்கள் அழுகிவிடும். இம்மாதிரிக் கேடுகள் இன்சுலின் ஆண்டிபயோடிக் கண்டுபிடிப்புக்குப் பிறகு பெருமளவு குறைந்துள்ளன. இந்நோயாளிக்கு வரக்கூடிய ஏனைய கேடுகளாவன விழித்திரைப் பாதிப்பு ஏற்பட்டுப் பார்வை மங்கிப் பார்வையே போய்விடும். உடலின் சூடு, வலி, தொடு உணர்வு அதிர்வு போன்றவற்றில் ஒரு மாறுபாடு தோன்றும். இரவில் தூங்கும்பொழுது கூடக் காலில் வலி இருக்கும். சிறுநீரகத்தில் அழற்சி, புண் உண்டாகும். இத்துடன், நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய வலி, மாரடைப்பு, இரத்தக் கொதிப்பு, காசநோய் போன்றவை மற்றவர்களைவிட அதிகம் வரும். ஈறுகள் பெருத்தச் சீழ் பிடித்துப் பல் ஆட்டம் காணும். பெண்களுக்கு குறைப்பிரசவம், கருச்சிதைவு குழந்தை பிறக்கும்பொழுது இறந்து பிறத்தல், பிறந்த குழந்தை பெருத்திருத்தல் போன்றவை நிகழும், இத்துணைக் கொடுமைகளை ஏற்படுத்தும்.

தொடரும்...


தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்

எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1