tamilnadu

img

புழுதி படலமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலை

ஈரோடு,மே 15-சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில் புதிய பாலம்கட்டப்பட்டு தார்சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புங்கம் பள்ளி அருகே புதியதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பால பணியானது கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தநிலையில் சமீபத்தில் அப்பணிகள் நிறைவுபெற்றன. ஆனால், இதன்பின் பாலத்தின்மேல் பகுதியில் தார் சாலை அமைக்கப்படாத நிலையில், அச்சாலையில் தொடர்ந்து வாகனங்கள் பயணிப்பதால் அப்பகுதி முழுவதும் புழுதி படலமாக காட்சியளிக்கிறது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும்சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, நெடுஞ்சாலை துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையானது மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் தொடர்ந்து வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. இந்நிலையில் பாலப் பணி முடிவடைந்து நான்கு மாதங்கள் கடந்த பிறகும் முறையாக தார் சாலை அமைத்து கொடுக்கவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி படலமாக மாறி எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மிக மோசமாக காட்சியளிக்கிறது. ஆகவே, இதன்காரணமாக பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து செயல்பட்டு தார்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

;