tamilnadu

img

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்கும்

கோவை, மே 10-மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்த மறுநாளே தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்கும் என சூலூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்த்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமியை ஆதரித்து வியாழனன்று மாலை காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் விஎம்சி மனோகரன் தலைமையில் கருமத்தம்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகிய 4 தலைவர்கள்தான் சுயமரியாதையை கற்று தந்தவர்கள், பகுத்தறிவு, சுயமரியாதை, சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு என இவர்கள் இல்லாமல் தமிழ் சமுதாயம் கிடையாது. ஆனால், இவை அனைத்திற்கும் விரோதமானது பாஜக அரசு. இந்த பாஜகவை எதிர்க்கும் மாநிலங்களில் முதல் வரிசையில் இருப்பது தமிழகம். ஏன்னென்றால் நமக்கு தன்மானம் உண்டு. ஒரே மதம், ஒரே இனம், ஒரே கலாச்சாரம், ஒரே உடை, ஒரே பழக்க வழக்கம் இருக்க வேண்டும் என பாஜக சவால் விடுகின்றது.


அதை முறியடிக்க வேண்டியது நமது கடமை. அதற்காக கடந்த ஏப்ரல் மாதம் வாக்களித்தீர்கள். மத்தியில் நீங்கள் விரும்பும் அரசு அமையும். திமுகவும் அந்த அரசில் இருக்கும். பாஜக அறிவித்துள்ள ஜிஎஸ்டி என்பது பூ மாலையை குரங்கு கையில் கொடுத்ததுபோல் உள்ளது. இதை காங்கிரஸ் மாற்றியமைத்து 2.0 வடிவில் புதிய வரியை கொண்டு வருவோம். இதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும். அதேநேரம், இன்றுள்ள அதிமுக எம்ஜிஆர் கண்ட கழகமோ, ஜெயலலிதா வளர்த்த கட்சியோ அல்ல. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஜோடி நடத்தும் நகைச்சுவை நாடகம். மோடிக்காக ஆடுகின்ற ஜோடி. இவர்களுக்கு எந்த கொள்கையும் இல்லை. இந்த அரசை பாஜகவின் கைப்பாவை அரசு என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். தமிழகத்தில் நீட் தேர்வை அனைவரும் எதிர்த்தார்கள். அனிதா தற்கொலைக்கு நீட் தேர்வு முறைதான் காரணம். ஆகவே, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் நீட் ரத்து என மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ராகுல் அறிவிக்கிறார்.


அதே நாளில் பாஜக அமைச்சர் பீயூஸ்கோயல், நீட் தேர்வு தொடரும் எனவும், அதை மாநில அரசு நிறைவேற்றும் என்றும் சொல்கின்றார். தமிழக அரசை துச்சமாக பேசுகின்றார். மத்திய அமைச்சர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அரசு சொல்லியிருக்கலாமே? இவர்களை கண்டித்து அதிமுகவினர் அறிக்கை தந்திருக்கலாமே, அந்த அளவிற்கு பாஜக மிரட்டியுள்ளது. அவர்களை மீறி இந்த ஜோடி எதுவும் செய்ய முடியாது. அதிமுக அரசின் சாதனைகள் என்று எதைக் கூற முடியும்? பொள்ளாச்சி பாலியல் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, தலைமை செயலாளர் அலுவலகத்திலேயே சோதனை, அமைச்சர் வீட்டில் சோதனை, கிரானைட் கொள்ளை என இவைகள் தான் நினைவுக்கு வருகின்றது. மக்களுக்கு பயனுள்ள எதாவது ஒரு திட்டம் நினைவுக்கு வருகின்றதா, இல்லை. இந்த அரசு இருந்து என்ன பயன். இந்த அளவிற்கு கேளி கூத்தான அரசு இருந்தது கிடையாது. எனவே, ஆட்சியை மாற்ற பொங்கலூர் நா.பழனிசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இதேபோல், மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்த மறுநாளே தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர்வார். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். முன்னதாக, இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, சூலூர் தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மெளலானா, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எம்ஏ, புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சூலூர் தாலுகா செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், கொமதேக செயலாளர் பிரீமியர் செல்வம், மதிமுக செயலாளர் குகன் மில் செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலா மணிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.