tamilnadu

தாராபுரம் ,திருப்பூர் முக்கிய செய்திகள்

அரசு வளாகத்தில் மத வழிப்பாட்டு தலம்

 திராவிடர் கழகம் எதிர்ப்பு

தாராபுரம், ஜூலை 5 – அரசு வளாகத்தில் மதவழிபாட்டுதலம் அமைக் கப்பட்டுள்ளதை அகற்றக்கோரி திராவிடர் கழகம் சார்பில் துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் திராவிடர் கழகம் சார்பில், காங்கேயத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோயில் கட்டுப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது,  காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக  வளாகத்தில் சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு கடந்த செவ்வாயன்று கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது. முன்னதாக, கோயில் கட்டுமான பணி  நடைபெற்றக் கொண்டிருந்த நிலையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளரிடம், பக்தி என்பது தனிச்சொத்து பொது சொத்தல்ல அவரவர் விரும்புகின்ற மதவழிபாடுகளை, வழிபாடு தொடர்பான விழாக்களை அவரவர் வீடுகளில் வைத்துக்கொள்ளாமே தவிர அரசுக்கு சொந்தமான இடங்களில் வைக்க சட்டத்தில் இடமில்லை. ஆகவே காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதவழிபாட்டு தலத்தை அமைக்கக்கூடாது என கோரியிருந்தோம்.   இந்நிலையில் செவ்வாயன்று இரவு மத வழிபாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. எனவே இந்த அத்துமீறல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சண்முகம், சிபிஎம் தாலுகா செய லாளர் என்.கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகர செயலாளர் செந்தில்குமார், ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.செல்வம், ஆதித்தமிழர் கட்சி  ஆறுச்சாமி, தமிழ்ப்புலிகள் கட்சி மேற்கு மண்டல செய லாளர் ஒண்டிவீரன்  ஆகியோர் மனு அளித்தனர்.

நல்லூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 5- திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகம் உள்ள நல்லூரில் குடிநீர் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வீட்டு இணைப்புகளுக்கு வாரம் இருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீதிகளில் மலை போல் தேங்கி உள்ள குப்பையால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கிக்கிடக்கும் குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடையை வாரம் இருமுறை சுத்தம்  செய்து  கொசுமருந்து அடிக்க வேண்டும். நகரில் விபத்து களை ஏற்படுத்தும் வகையில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தோண்டப்பட்டு சேதப்படுத்தப்பட்ட தார்ச்சாலைகளை புதிதாக அமைத்துத் தர  நடவடிக்கை எடுக்க  வேண்டும். சாலை, சாக்கடை வசதிகள் இல்லாத பகுதிகளில் தார்ச்சாலை, சாக்கடை வசதிகள் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டுக்கு  உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகளை பாரமரிக்கவும், தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

வீடு புகுந்து திருடியவருக்கு  6 மாத கடுங்காவல் தண்டனை

திருப்பூர், ஜூலை 5-  பெருமாநல்லூர் அருகே வீடு புகுந்து திருடியவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழ னன்று தீர்ப்பளித்தது.  பெருமாநல்லூர் நியூ வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (53). இவர்,  2014 ஆம் ஆண்டு வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர்கள்  இவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த மோதிரம், கம்மல் உள்ளிட்ட நகைகளை திருடிச் சென் றனர்.  இது குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த மகி (எ) மகேந்திரனை (29) கைது செய்தனர். இவ்வழக்கு, அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. இதில்,  மகி (எ) மகேந்திரனுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும்,  ரூ.200 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

புகையிலை, லாட்டரி, மது விற்பனை: 6 பேர் கைது

திருப்பூர், ஜூலை 5- திருப்பூரில் சட்டவிரோதமாக புகையிலை, மதுபானம், லாட்டரி ஆகியவற்றை விற்பனை செய்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாநகர் பகுதியில் சட்டவிரோதமாக புகை யிலை, லாட்டரி, மதுபானம் விற்பதாக மாநகர காவல் ஆணையருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து காவல்நிலையத்திற்கும் திடீர் சோதனை நடத்த  உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் குப்பு சாமிபுரம், அரிசிக்கடைவீதி ஆகிய இடங்களில் உள்ள கடை களில் புகையிலை விற்பனை செய்த பரசுராம்படேல் (2)5, சர்வண்ராம் (24) ஆகியோரை தெற்கு காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 115 புகையிலை பாக் கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் குமரானந்தபுரம் சிவன் தியேட்டர் அருகே லாட்டரி விற்பனை செய்த ராஜேந்திரனை (57) வடக்கு காவல்துறையினர் கைது செய்து, 5 லாட்டரி சீட்டு மற்றும்  ரூ.500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். மில்லர் பேருந்து நிறுத்தம்,காலேஜ் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய  இடங்களில் உள்ள டாஸ்மாக் மது கடைகளில் சட்டத்துக்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்த காசிநாதன் (40), செல்வம் (30), காளிதாஸ் (23) ஆகியோரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.