tamilnadu

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

கோவை, ஏப். 20-சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த கனகராஜ் கடந்த மார்ச் 21ம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சூலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதியன்று நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் இம்மாதம் 29ம் தேதியாகும். 30ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மே-2ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். வாக்குப் பதிவு மே 19ம் தேதியன்று நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான மே23 அன்று சூலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


தேர்தல் அலுவலர் நியமனம்


இந்நிலையில், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக நகர்ப்புற நிலவரி உதவி ஆணையர் ச.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்பேசி எண்.7601954524. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக சூலூர் வட்டாட்சியர் ஆ.ஜெயராஜ். இவரது தொடர்பு எண்கள்.0422 2681000, 9942819802. மற்றொரு உதவி தேர்தல் அலுவலராக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜெ.மீனாகுமாரி (அலைபேசி எண்.9600439524) நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கு.இராசாமணி விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.


;