tamilnadu

அவிநாசியில் நாற்று நடும் போராட்டம்

போராட்டம் ஒத்திவைப்பு


அவிநாசி, ஏப்.24அவிநாசி அடுத்த முருகம்பாளையம் பகுதியில் தார் சாலை அமைப்பதற்கு மூன்றாண்டுக்கு முன்பு நிதிஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது வரை சாலை அமைக்காததால் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம் அறிவித்திருந்தது. இதில் ஒப்பந்ததாரர் பேச்சுவார்த்தை அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதுகணியம் பூண்டி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முருகம்பாளையத்திலிருந்து திருப்பூர் காலேஜ் ரோடு செல்லும் சாலையினை தார் சாலையாக அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில் நவாடு இணைப்பு சாலை திட்டத்தின் மூலம் முருகம்பாளையத்திலிருந்து திருப்பூர் காலேஜ் ரோடு வரை மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ஜெகதீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் புதுப்பாளையம் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்கள் சார்பில் புதனன்று சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினருமான பி.முத்துச்சாமி கூறுகையில், கனியாம் பூண்டி ஊராட்சியில் இரண்டு தார் சாலைகள் அமைக்க பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை. மேலும் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஒப்பந்தங்கள் ஆளும் கட்சி பிரமுகரான ஜெகதீஷ்க்குதான் வழங்கப்படுகின்றது. இதில் பல ஊராட்சிகளில் தார் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. இதில் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என தெரிவித்தார். இந்நிலையில் புதனன்று ஒப்பந்தாரர் ஜெகதீஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வாரத்தில் தார் சாலை அமைக்கும் பணி துவங்குவதாக உறுதியளித்தார். இதனையடுத்து நாற்று நடும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. 


;