சேலம், ஜூன் 30- சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தைக் கைவிட சட்டசபையில் வலியுறுத்துமாறு, பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஞாயிறன்று சேலம் திமுக எம்எல்ஏ ராஜேந்தி ரனை சந்தித்து மனு அளித்தனர். சேலத்திலிருந்து சென்னைக்கு 8 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நடந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் இத்திட்டத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் 8 வழிச்சாலையை கைவிட வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் சேலம் மாவட்ட செயலாளர் நாராயணன் கூறுகையில், சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் கைவிடப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திமுக தலைவர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.