மேட்டுப்பாளையம், அக்.8- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி யாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் நடுவே சிக்கிக்கொண்டு கரை திரும்ப இயலாமல் தவித்த 45 பேரை தீயணைப்பு மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். பண்டிகை கால தொடர் விடுமுறை காரணமாக மேட் டுப்பாளையம் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த இரு தினங்களாக அதிகரித்து காணப் பட்டது. இங்குள்ள இயற்கை எழில் மிகுத்த பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பவானியாற்றின் கரையோரம் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கமாக உள்ளது. இதன்படி, செவ்வாயன்று காலை கோவையில் இருந்து மேட்டுப் பாளையம் வந்த சுற்றுலா பயணிகள் சுமார் 45 பேர், தேக்கம் பட்டி செல்லும் வழியில் உள்ள பம்ப் ஹவுஸ் அருகே ஓடும் பவானியாற்றின் கரையில் அமர்ந்திருந்தனர். இப்பகுதியில் நடுவே பெரிய மண்திட்டு உள்ளதால் ஆறு இரு பிரிவாக பிரிந்து செல்லும். அப்போது ஆற்றில் முழங்கால் அளவே தண்ணீர் சென்றதால் கரையில் இருந்து தண்ணீரை கடந்து அந்த மேடான இடத்திற்கு சென்ற இவர்கள் அங்கேயே சமைத்து உண்டு பொழுதை கழித்துள்ளனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்தி பணிக்காக பவானியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்படும் முன்பு இதற்கான அபாய ஒளியும் எழுப்பட்டது. ஆனால் இது குறித்து அறியாத சுற்றுலா பயணிகள் உடனடியாக கரைக்கு திரும்பாமல் அங்கேயே இருந்துள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் ஆற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியதும் அச்சத்தில் ஆழ்ந்தனர். ஆற்றின் நடுவே சிக்கி கொண்டதை உணர்ந்து உதவி கோரி சப்தம் எழுப்ப துவங்கினர். இதனைக்கண்டு உள்ளூர் மக்கள் இது குறித்து மேட்டுப் பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், ஆற்றின் வேகம் சற்று குறைய துவங்கியதும் பரிசல்கள் மூலம் அனைவரையும் மீட்டனர். வெளியூரில் இருந்து வருபவர் கள் ஆற்றின் போக்கை அறியாமலும் உள்ளூர் மக்களின் எச்சரிக்கையினை மீறியும் இது போல் ஆபத்தை தேடிக் கொள்கின்றனர். மேலும் இது போன்ற மழைக்காலங்களில் எந்த காரணத்தை கொண்டும் ஆற்றில் இறங்க கூடாது என தீயணைப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர்.