tamilnadu

img

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த சம்பவம் -கொலை வழக்காக பதிவு செய்க!

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோயம்புத்தூர், டிச. 3 –  மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து  அப்பாவி மக்கள் 17 பேர் உயிரி ழந்த சம்பவம் தொடர்பாக கொலை  வழக்காக பதிவு செய்து உரிய விசார ணை மேற்கொள்ள வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதி ஏடி காலனியில் ஏராளமான அருந்ததிய குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்கிற பிரபல ஜவுளிக் கடையின் உரிமையாளர் சிவசுப்பிர மணியன் என்பவரின் சொகுசு வீடு அமைந்துள்ளது. இவரின் வீட்டை சுற்றி  80 அடி நீளத்தில், 20 அடி உயரத்தில் நீண்ட சுவர் ஒன்றை எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் இந்த சுவர் திங்களன்று அதிகாலை திடீரென இடிந்து அருகிலிருந்த அருந்ததியர் குடியிருப்புகளின் மீது விழுந்தது. இதில் ஐந்து வீடுகள் முற்றிலும் மண்ணில் புதைந்தது. இந்த கோர சம்பவத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த கோர சம்பவம் தமிழ கத்தையே பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சம்பவ இடத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் கே.பாலகிருஷ் ணன் செவ்வாயன்று நேரில் ஆய்வு  செய்தார். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சுவரை இவ்வளவு பெரியதாக கோட்டைச் சுவர் போல் கட்டி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் தரமற்றதாக கட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலமுறை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். குறிப்பாக, விபத்து ஏற்படும் இரு நாட்களுக்கு முன்னர் கூட மழைநீர் வீடுகளுக்குள் நுழைவதாக தெரிவித்துள்ளனர்.  ஆனால் சம்மந்தப்பட்ட நில உரிமையாளர் இதற்கு செவி சாய்க்கா மல் இருந்துள்ளார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, சுவர் இடிந்து விழுந்தற்கு முழு பொறுப்பையும் அரசு அதிகாரிகளும், நில உரிமையாளரும் ஏற்க வேண்டும்.  தற்போது, இந்த கோர சம்பவத்தை விபத்து என்ற வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இதனை கொலை வழக்காக பதிவு செய்து சம்மந்தபட்ட அனைவரையும் கைது  செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை போதாது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். 

இதேபோல், மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி கண்டனத்திற்கு உரியது. இதில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். விபத்து தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், உயிரிழந்த வர்களின் உடல்களை இரவோடு இரவாக தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியம் தமிழக காவல்துறைக்கு எங்கிருந்து வந்தது? ஏன்  தமிழக காவல்துறை பதட்டப்படுகின்றது? இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினர்.

மேலும், இத்தனை நாட்கள் இப்பகுதியில் சுகாதார பணிகள், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் முதல்வர் வருகையை முன்னிட்டு பணிகள் மேற்கொண்டு வரு வது கண்டிக்கத்தக்கது. அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் புதிய கான்கீரிட் வீடுகள் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை  செய்வதை காட்டிலும் அமைச்சர் களுக்கு சேவை செய்வதை முக்கிய பணியாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சாடினார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், கே.மனோகரன், ஆர்.வேலுசாமி, என்.பாலமூர்த்தி, அவினாசி முத்துசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்ட செயலாளர் நந்தகோபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.பாலசந்திரபோஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

;