tamilnadu

img

ஐவுளித்துறை நெருக்கடி - 12 லட்சம் பேர் வேலை இழப்பு இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு வேதனை

பொருளாதார மந்த நிலை காரணமாக 25 சதவிகிதம் வரை ஜவுளித் தொழில்கள் மூடப்பட்டு, 12 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாக இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு தொழில்கள் சரிவை சந்தித்து வருகின்றன. அதற்கு ஜவுளித் தொழில்களும் விதிவிலக்கல்ல. நாட்டில் மூன்றில் ஒரு பங்கு ஜவுளி தொழில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை 47 சதவிகித நூல் உற்பத்தியை தருவதுடன், சுமார் 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை தந்து வந்தன. பஞ்சாலைகள், நூற்பாலைகள், பின்னலாடைகள், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் ஜவுளி தொழில்களை சார்ந்து இயங்கி வருகின்றன. நாட்டின் 54 சதவிகித பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தமிழ்நாடு கைகொடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு பருத்தி நூல் ஏற்றுமதிக்கு எந்த சலுகைகளும் வழங்குவதில்லை. இதனால் 35 சதவிகித பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்து இருப்பதாக ஜவுளி சங்கத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் கூறுகையில், அண்மையில் ஏற்பட்டுள்ள தொழில் சுணக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஜவுளித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 25 சதவிகிதம் வரை ஜவுளி தொழில்கள் மூடப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக 12 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாக தெரிவித்தார்.  மேலும், ஜவுளித்தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு கடன் மறுசீரமைப்பு, ஏற்றுமதி சலுகைகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். ஏற்கனவே, இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் மற்றும் ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அனைத்து ஜவுளித்துறையினரும் கலந்துரையாடி இத்தொழிலை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முடிவெடுத்து மத்திய அரசிடம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.  இதேபோல் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறுகையில், நாடு முழுவதும் ஜவுளித் துறையினருக்கு தொழில் மேம்பாட்டு நிதி, ஜிஎஸ்டி ரீபண்ட், ஏற்றுமதி சலுகை உள்ளிட்டவற்றில் தர வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை வழங்காமல் மத்திய அரசு நிலுவை தொகையாக வைத்திருக்கிறது. அதில், மூன்றில் ஒரு பங்கு தமிழக ஜவுளித்துறையினருக்கு வழங்க வேண்டியவை. கடந்த பத்தாண்டுகளாக இந்த தொகை வழங்கப்படாமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.  இதுகுறித்து ஐவுளித்துறையினர் மேலும் கூறுகையில், பல பஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், கடன் மற்றும் வட்டி கட்ட முடியாத நிலை இருப்பதாகவும், பஞ்சாலைகளுக்கு  கடன் மறுசீரமைப்பு, கடனுதவி, கடன் மற்றும் வட்டி கட்ட கால அவகாசம் வழங்க வேண்டுமென ஜவுளித்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மெகாவாட்டிற்கு கீழே வாங்கும் அனுமதி , காற்றாலை மின்சேமிப்பு வசதி நீக்கவும், பழைய காற்றலைகளை நீக்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் கழிவு பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத விவசாய சந்தை வரியினை நீக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். ஜவுளித்துறை புத்துணர்வு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஜவுளித்தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  -அ.ர.பாபு

;