திருப்பூர், ஆக. 20- திருப்பூரில் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பேருந்து வசதி செய்து தரக் கோரியதுடன், வழியில் அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யவும் மனு அளித்தனர். திருப்பூர், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க திங்க ளன்று வந்தனர். அப்போது நுழைவாயில் முன் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அனைவரையும் அனுமதிக்காமல் தடுத்ததால், மாணவர்கள் நுழைவாயில் முன் முற்றுகையிட்டனர். பிறகு அவர்களை காவல் துறையினர் அனுமதித்தனர். மாணவர்கள் உள்ளே சென்று குறை தீர்க்கூட்டத்தில் அளித்த மனுவில், நாங்கள் முத்தனம்பாளையம் அடுத்துள்ள ஆயமரம் பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி யில் பள்ளி இல்லாததால் விஜயாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறோம். பள்ளிக்கு செல்ல எங்கள் பகுதியில் இருந்து பேருந்து வசதியில்லை. எனவே 30 பேர் அங்காளம்மன் கோவில் வழியாக 8 கி.மீ நடந்து சென்று வருகிறோம். அவ்வழியில் கடந்த ஒன்றரை ஆண்டாக டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அங்கு மது அருந்துவோர் நாங்கள் நடந்து செல்லும்போது கேலி, கிண்டல் செய்கின்றனர். இச்சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்தக் கடை அருகே கொலை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவ் வழியே செல்ல எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மதுக்கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும். ஆயமரம் பகுதியில் இருந்து முத்தணம்பாளையம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்து தர வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.