tamilnadu

img

ஜிஎஸ்டியில் கிடைக்க வேண்டிய தொகை ரூ..5,200 கோடி கடன் வாங்கியாவது திருப்பித் தாருங்கள்: தாமஸ் ஐசக்

திருவனந்தபுரம், ஜுலை 5- கேரளத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை (ரூ..5,200 கோடி) நிறுத்தி வைப்பது சரியான நிலைப்பாடு அல்ல என்று மாநில வரி  ஆணையர் ஜிஎஸ்டி கவுன்சில் செயலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பணம் இல்லை என்றால், பொதுச் சந்தையிலிருந்து கடன் பெற்றாவது நிலுவையை  திருப்பித்தர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடிதத்தில் வரி ஆணையர் மேலும் கூறியிருப்பதாவது : திருப்பிச் செலுத்துவதற்கான செஸ் வசூல் காலத்தை நீட்டிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யலாம். ஊரடங்கைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வருவாய் சரிந்ததால், இழப்பீட்டு பிரச்சினை மேலும் மோசமடைந்தது. இழப்பீட்டுத் தொகை கடுமையாக உயர்ந்தது. மே வரை மூன்று மாத இழப்பீடு ரூ .1 லட்சம் கோடியை தாண்டும். கேரளத்துக்கு மட்டும் ரூ.5,200 கோடி நிலுவை உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி மாற்றியமைக்கப்பட வேண்டும்
நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறுகையில், பொருட்கள் சேவை வரி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கவுன்சில் கூட்டங்களில் கடுமையாக வலியுறுத்தப்படும். பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட இதற்கு சாதகமாக பதிலளித்து வருகின்றன. வருவாய் ஈட்டும் இலக்கை அடைய ஜிஎஸ்டியால் முடியவில்லை. ஒரு லட்சம் கோடி வருவாயில் தத்தளிக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட 14 சதவிகிதம் வருவாய் வளர்ச்சியும் இல்லை என்றார்.
மூன்றாம் ஆண்டை கடக்கும்போது, ஜிஎஸ்டி தோல்வியுற்ற சீர்திருத்தமாக உள்ளது. இரண்டாம் ஆண்டுகளுக்கான வருடாந்திர வருவாய் இன்னமும் திருப்பி தரப்படவில்லை. உடனே கிடைக்க வேண்டிய இ-பில் தொகையும் கிடைக்கவில்லை. வரி விகிதங்கள் வருவாயை உறுதி செய்யவில்லை. ஆடம்பரப் பொருட்களுக்கான வரி குறைந்தது. அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறையல்லை. இதே நிலையை தொடர முடியாது. இழப்பீடு இல்லாமல் மாநிலத்தால் சமாளிக்க முடியாது என்றும் நிதியமைச்சர் கூறினார்.

ஜிஎஸ்டியின் சமமான பகிர்வுக்கு முடிவுகட்ட வேண்டும்.  மாநிலத்திற்கு 60 சதவிகிதம், மையத்திற்கு 40 சதவீதம் என மாற வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை பாதிக்காத எஸ்ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்க வேண்டும். வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் இவை முக்கிய விவாதங்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ரூ.455 கோடி வருவாய் வீழ்ச்சி
மாநிலத்தின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. கடந்த மாதத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளில் உட்பட கடும் சரிவு ஏற்பட்டது. பூர்வாங்க மதிப்பீடுகளின்படி, ஜூன் 2019 உடன் ஒப்பிடும்போது இந்த ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மற்றும் மது வரி ரூ .1037 கோடி குறைந்துள்ளது. ஜிஎஸ்டியில் ரூ.455 கோடி குறைந்தது. பெட்ரோலில் இருந்து ரூ.206 கோடி, டீசலில் இருந்து ரூ .196 கோடி. மது வரி ரூ.507 கோடி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோலில் ரூ .328 கோடி, டீசலில் ரூ.367 கோடி, மதுபானத்தில் ரூ .566 கோடியாக வருவாய் இருந்தது. கடந்த மாதம் மாநில ஜிஎஸ்டியில் ரூ.744 கோடியும், ஐஜிஎஸ்டியில் ரூ.520 கோடியும் (மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி) கிடைத்தது. 2019 ஜூன் மாதத்தில் முறையே ரூ.797.81 கோடி மற்றும் ரூ .921.51 கோடி கிடைத்துள்ளது. பொது போக்குவரத்து குறைந்தது டீசல் வரி வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

;