tamilnadu

img

சிஐடியு மாநாடு மகத்தான வெற்றி பெற கேரள முதல்வர், அமைச்சர்கள் வாழ்த்து

திருவனந்தபுரம், ஜன. 25- ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் மூலமாக மகத்தான வரலாறு படைத்த தமிழ் மண்ணில் தொழிலாளி வர்க்க இயக்கமான இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 16வது அகில இந்திய மாநாடு நடைபெறுவது உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்த மாநாடு மேற்கொள்ளும் தீர்மானங்கள் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துவதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சிஐடியு மாநாட்டையொட்டி தீக்கதிர் நாளேடு வெளியிட்டு வரும் சிறப்புச் செய்திகள் மற்றும் சிறப்புப் பக்கங்கள் அடங்கிய இதழுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், மாநாடு வெற்றிபெற வாழ்த்தியும், கேரள இடதுஜனநாயக முன்னணி அரசின் அமைச்சர்களும் செய்தி அனுப்பியுள்ளனர்.

கேரள அரசின் தொழில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் விடுத்துள்ள செய்தியில், “கீழவெண்மணி, சின்னியம்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் எண்ணற்ற மகத்தான தியாகிகளின் நினைவுகளோடு தொழிலாளர் இயக்கம் சென்னையில் கூடியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது முறையாக நடைபெறுகிற சிஐடியு அகில இந்திய மாநாட்டை உணர்ச்சிமயத்துடன் தமிழக மக்கள் வரவேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் இடதுசாரி தொழிலாளர் அமைப்பு என்ற முறையில் சோசலிச தத்துவத்தை உறுதியாக பற்றிக்கொண்டு தொழிலாளர் மீதான சுரண்டலுக்கு முடிவு கட்டவும் எல்லாவித சுரண்டல்கள் இருந்தும் சமூகத்தை முழுமையாக விடுவிப்பதாகவும் சிஐடியு செயல்படுகிறது. அத்தகைய தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு ஒரு முன்மாதிரியாக வளர்ச்சியையும் மக்கள் நலனையும் சாத்தியமாக்குகிற கேரள அரசு இன்றைக்கு விளங்குகிறது” என்று கூறியுள்ளார். 

கேரள நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வர்க்க ஒற்றுமை என்ற கண்ணோட்டத்தோடு 1970ல் உதயமான சிஐடியு, தனது பொன்விழா ஆண்டில் சென்னையில் கூடியிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த நூறாண்டு காலமாக இந்தியாவில் நடந்துள்ள தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான போராட்டங்கள், தியாகங்களின் கம்பீரமான வரலாற்றை சிஐடியு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். கேரள கூட்டுறவு, சுற்றுலா மற்றும் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விடுத்துள்ள செய்தியில் “சென்னை சிஐடியு அகில இந்திய மாநாடு இந்திய தொழிலாளி வர்க்க இயக்கத்தை, ஏழை-எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் இதர கிராமப்புற தொழிலாளர்களின் ஒற்றுமையை கட்டிவளர்த்து நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை இன்னும் வலுவாக தொடர உறுதியேற்கட்டும்; மாநாடு வெற்றிபெறவும், மாநாட்டையொட்டி தீக்கதிர் தமிழ் நாளிதழ் வெளியிடும் சிறப்பிதழ்கள் வெற்றிபெறவும் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சர்கள் டி.பி.ராமகிருஷ்ணன், கே.டி.ஜலீல், மெர்சி குட்டி அம்மா, ஏ.சி.மெய்தீன், பி.திலோத்தமன் உள்ளிட்டோரும் சிஐடியு மாநாடு வெல்லவும், தீக்கதிர் சிறப்பிதழ் சிறக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரத்திலிருந்து வி.ஜெயக்குமார்

;