tamilnadu

img

அருமனை, தேங்காப்பட்டணத்திற்கு கேரள பேருந்துகள்

நாகர்கோவில், ஆக.25- திருவனந்தபுரத்திலிருந்து குமரி மாவட்டம் அருமனை மற்றும் தேங்காப்பட்டணத்திற்கு இரண்டு கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகள் (கேஎஸ்ஆர்டிசி)  ஆகஸ்ட் 28 புதன்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழுவின் கோரிக்கையை ஏற்று கேரள அரசு இந்த பேருந்துகளை இயக்க உள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் வேலை,  கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக வும் உறவினர் வீடுகளுக்கு அன்றாடம் சென்று வரு கின்றனர். நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்துக்கும் இடையே 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசும் கேரள அரசும் பயணிகள் நலன் கருதி சம அளவில் இந்த வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கி வருகின்றன. ஆனால் உள் கிராமங்களிலிருந்து திருவனந்தபுரம் செல்ல போதிய நேரடி பேருந்து வசதி இல்லை. 

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு சார்பில் கேரள மாநிலம் பாறசாலை தொகுதி சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ஹரீந்திரன் உதவியுடன் புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி ,கேரள போக்குவரத்து கழக அதிகாரிகளை நேரில் சந்தித்து அருமனை, தேங்காப்பட்டணம்,  மணவாளக்குறிச்சி ஆகிய இடங்களுக்கு திருவனந்தபுரத்திலிருந்து நேரடி பேருந்து இயக்க வலியுறுத்தினார்.  அதன்படி முதல்கட்டமாக 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. புதனன்று காலை 8 மணிக்கு அருமனையிலிருந் தும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேங்காப்பட்டணத்தி லிருந்தும் இந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் ஹரீந்திரன் எம்எல்ஏ, கேரள சாலைப் போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆர்.செல்லசுவாமி மற்றும் மாவட்ட, வட்டார தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மணவாளக்குறிச்சிக்கான பேருந்து ஓணம் பண்டிகைக்கு பிறகு இயக்கப்பட உள்ளது.