tamilnadu

img

சுற்றுலாத் துறையின் ‘வீட்டில் உணவு’ திட்டத்திற்கு மாபெரும் வரவேற்பு

திருவனந்தபுரம், அக்.4- ஓட்டல்களில் வீட்டு உணவு என்கிற பெயர் பலகையை சாதாரணமாக எங்கும் பார்க்க முடியும். ஆனால் வீட்டிலேயே உணவு தரும் கேரள சுற்றுலாத்துறையின் மாறுபட்ட திட்டத்திற்கு சுற்றுலா பயணிகளிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  ‘எக்ஸ்பீரியன்ஸ் எத்னிக் குஷின்’ என்கிற திட்டத்தை கேரள சுற்றுலாத்துறை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்துக்காக 2,000 வீடுகளை பதிவு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் 2888 வீடுகள் பதிவாகின. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் மாவட்டங்களில் பதிவு செய்தவர்களுக்கான பயிற்சியும் முடிவடைந்துள்ளது.  கேரள பெண்களின் சமையலை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் திட்டம் துவக்கப்பட்டது. வீட்டில் விருந்தினரை வரவேற்கும் பாரம்பரிய முறையில் கேரளீய உணவு தயாரித்து வழங்கும் தொழில் கேரளம் முழுவதும் பரவலாகும். ஒவ்வொரு தொழில் முனைவோரின் முகவரி, புகைப்படம், செல்பேசி எண் போன்ற விவரங்கள் கேரள சுற்றுலாத்துறையின் இணைய தளத்திலும், செல்பேசி செயலியிலும் இணைக்கப்படும். சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வீட்டுக்கு வந்து சாப்பிடுவார்கள்.  கேரள கிராமங்களை சுற்றுலா நடவடிக்கைகளின் முக்கிய மையமாக்குவது என்கிற நோக்கத்துடன் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த திட்டம் குறித்து அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது. உணவு வகைகளை ருசித்து சாப்பிடவும், அதன் தயாரிப்பு முறை குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்த திட்டம் பெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதிவு செய்யும் வீடுகளை சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் பார்த்து ஆய்வு செய்த பிறகே திட்டத்தில் இணைக்கப்படுவர்.