tamilnadu

img

உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து - 2019

1975-1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற முதல் இரண்டு உலகக் கோப்பையிலும் படுதோல்வி அடைந்த இந்திய அணி, மூன்றாவது உலகக்கோப்பை (1983) தொடரில் கபில்தேவ் தலைமையில் வித்தியாசமான வியூகத்துடன் களமிறங்கியது.குரூப் ‘பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணியை எதிரணிகள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதனால் சத்தமில்லாமல் தனது அதிரடியை ஆரம்பித்த இந்திய அணி, 6 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்து டாப்-5 அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மேற்கு இந்திய தீவுகள் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டி எடுத்து எதிரணிகளை மிரட்டியது. அரையிறுதியில் பலமான இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதியில் மீண்டும் மேற்கு இந்திய தீவுகள் அணியைச் சந்தித்தது. அபாயகரமான பேட்ஸ்மேன்களையும், மிரட்டலான வேகப்பந்து வேதாளங்களையும் கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்தியாவை மிக எளிதில் ஊதித் தள்ளி கோப்பையை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

அதற்கேற்றார் போல் நமது வீரர்கள் ஆட்டமும் அமைந்திருந்தது.

முதலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டை போன்று அடுத்தடுத்து சரிந்தனர். தொடக்க வீரரான தமிழகத்தின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மட்டுமே சிறிது தாக்குப்பிடிக்க (38 ரன்கள்) மற்றவர்கள் சொற்ப ரன்களில் சுருண்டனர். இறுதியில் இந்தியா 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 184 ரன்களை துரத்திச் சென்ற மேற்கு இந்திய தீவுகள் பேட்ஸ்மேன்கள் கபில்தேவ், அமர்நாத், மதன்லால், ரோஜர் பின்னி ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஹாட்ரிக் கோப்பை கனவை இந்திய பந்துவீச்சாளர்கள் கானல் நீராக்கினர். 43 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி உலகக் கோப்பையை முதல்முறையாக முத்தமிட்டது. கபில்தேவ் தலைமையிலான அணி உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியபடி நிற்கும் காட்சி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சித்திரங்களில் ஒன்றாக நிலைபெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு தான் இந்தியர்கள் கிரிக்கெட்டுடன் இணை பிரியா புதிய ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  

;