tamilnadu

img

சூதாட்ட தொடர்பு சிக்கலில் ஷாகிப் அல் ஹாசன்

தற்போதைய கிரிக்கெட் உலகில் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வரும் வங்கதேச அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல் ஹாசனிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூதாட்ட தரகர் ஒருவர் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக பேசியுள்ளார். ஆனால், ஷாகிப் அதை ஏற்கவில்லை.  சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) விதிப்படி வீரர்களை எந்த சூதாட்டத் தரகர்கள் அணுகினாலும் உடனடியாக அதை சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம், அல்லது ஐசிசியிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால் ஷாகிப் சூதாட்ட தரகர் தொடர்பு பற்றி எவ்வித தகவலும் தெரிவிக்காததால் தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்.  

இந்த விவகாரம் ஐசிசி-க்கு செல்ல சர்வதேச அளவில் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சூதாட்ட தரகரின் தொலைபேசி எண்களை ஆய்வு செய்த பொழுது ஷாகிப் சூதாட்ட தரகரிடம் பேசியது உறுதி செய்யப்பட்டது.  ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பிடம் புகார் தெரிவிக்காததால் ஷாகிப் 18 மாதங்கள் வரை தடையைச் சந்திக்க உள்ளார். இதற்கான முறையான அறிவிப்பை ஐசிசி ஓரிரு நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சூதாட்ட பிரச்சனை காரணமாக ஷாகிப் வங்கதேச அணியில் இடம் பிடிப்பது சிரமமான விஷயம் என்பதால் இந்திய சுற்றுப்பயணத்தில் அவர் இடம்பெற மாட்டார் எனத் தெரிகிறது. ஒரு வேளை ஷாகிப் நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் வரும் 3-ஆம் தேதி தொடங்குகிறது.  இந்த தொடர் தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், ஷாகிப் அல் ஹாசன் சூதாட்ட பிரச்சனை வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.