tamilnadu

img

இலங்கை ரசிகர்களை அலற வைத்த பாக்., கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மழையால்  பாதிக்கப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் போட்டி கராச்சியில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் பரபரப்பின்றி நடைபெற்றாலும், 2-வது இன்னிங்ஸில் (இலங்கை பேட்டிங்) ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்தால் இலங்கை,பாகிஸ்தான் என இரு நாட்டு ரசிகர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.  

பாகிஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை இலங்கை அணி துடிப்பாகத் துரத்திக்கொண்டிருந்த வேளையில், போட்டி நடைபெற்ற கராச்சி மைதான விளக்குகள் மின்னணு பிரச்சனையால் திடீரென (ஒரு டவர் லைட்டை தவிர) அணைந்தது. 2009-ஆம் ஆண்டு நடை பெற்ற தீவிரவாத தாக்குதலை நினைத்துக் கொண்டே போட்டியை ரசித்துக் கொண்டிருந்த இலங்கை ரசிகர்கள் மைதான  விளக்கு திகிலால்  கேலரியை விட்டு வெளியே ஓடினர். சில பாகிஸ்தான் ரசிகர்களும் ஓட்டம் பிடித்தனர். இலங்கை வீரர்களும் ஒரு வித கலக்கத்துடன் பெவிலியனில் அமர்ந்திருந்தனர். மின்னணு பிரச்சனை சரிசெய்யப்பட்ட பின் 10 நிமிடம் கழித்து போட்டி துவங்கியது. எனினும் மைதானத்தை விட்டு சென்ற இலங்கை ரசிகர்கள் நிறைய பேர் மறுபடியும் போட்டியை ரசிக்க வரவில்லை.  தீவிரவாத தாக்குதல் அபாயம் காரணமாக உயிரைப் பணயம் வைத்து பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்துள்ள இலங்கை அணிக்கு  ஜனாதிபதி அந்தஸ்து பாதுகாப்பு வழங்கினாலும், சாதாரண விளக்கு பிரச்சனைக்குக் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திணறுவது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;