tamilnadu

img

மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு கூட்டம் ஒத்திவைப்பு

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு ஜூலை 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மும்பையில் நடைபெறும் பிசிசிஐ-யின் ஆலோசனைக் கூட்டத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. அதன்படி எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் கூட்டம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், கடைசி நேரத்தில் தேர்வுக் குழு கூட்டத்தை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதி தொடர்பான அறிக்கைகள் சனிக்கிழமை காலையில்தான் கிடைக்கும் என கூறப்படுகிறது. தேர்வுக்குழு கூட்டம் தாமதம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.