tamilnadu

img

இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 398 ரன்களை ஆஸ்திரேலியா அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (46 ரன்), டிராவிஸ் ஹெட் (21 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 112 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதில், ஸ்டீவன் சுமித், தனது 25-வது சதத்தை நிறைவு செய்து, 142 ரன்களும் (207 பந்து, 14 பவுண்டரி), மேத்யூ வேட் தனது 3-வது சதத்தை பூர்த்தி செய்து, 110 ரன்களும் (143 பந்து, 17 பவுண்டரி) சேர்த்து ஆட்டம் இழந்தனர்.  பேட்டின்சன் 47 ரன்களுடனும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), கம்மின்ஸ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன் எடுத்துள்ளது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

;