காஞ்சிபுரம், நவ.24- பக்தர்கள் வேஷத்தில் நன்கொடை கேட்டு பெருகி வரும் கும்பல் மோசடி கும்பலாக இருக்குமோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் போர்வையில் ஆங்காங்கே பணம் கேட்பது பெருகிவருகிறது. திருப்பதி செல்கிறோம், பழனிக்கு செல்கிறோம், சாய்பாபா கோவிலுக்கு வேண்டிக் கொண்டி ருக்கிறோம் என பல கோவில்களை கூறி அதற்கேற்றவாறு மஞ்சள் சிவப்பு பச்சை என பல வண்ண வண்ண உடைகளோடு வீடு வீடாகச் சென்று நன்கொடை கேட்கிறார்கள். ரசீது அச்சடித்துக் கொண்டு நன்கொடை கேட்கும் கூட்டம் பெருகி வருகிறது. நன்கொடை மூலம் பெறக்கூடிய பணத்தை உண்மையிலேயே பயன்படுத்துகிறார்களா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உள்ளது. சாமிகள் பெயரைச் சொல்லி இப்படிப்பட்ட பேர்வழிகள் வசூலித்து ஏமாற்றுகிறார்களா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் ஏதாவது ஒரு சாமியின் பெயரைச் சொல்லிக்கொண்டு பக்தர்கள் வேஷம் போட்டுக்கொண்டு பணம் வசூலிக்கும் கூட்டத்தைப் பார்த்தவுடன் சில இடங்களில் மக்கள் அவர்களை கேள்வி கேட்டு விரட்டி அடிக்கும் சம்பவமும் நடைபெறுகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகளும் பகிரப்படுகிறது. அதே நேத்தில் உள்ளூரில் நிதி வசூலிப்பது யார் என்பது தெரியும். ஆனால் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ஊர்களில் இருந்து பணம் வசூலிக்க வருகிறவர்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது என்றாலும் அதன் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேதாச்சலம் நகரில் ஞாயிற்றுக்கிழமை (நவ,24) இரண்டு பேர் ஐயப்பன் மாலை போட்டுக்கொண்டு ஐயப்ப பக்தர்கள் போல் வந்தார்கள். கோவிலுக்கு நன்கொடை வசூலிக்கிறோம் என்று அடுக்குமாடி குடியிருப்புகளில் அழைப்பு மணி அடித்து கூப்பிட்டார்கள். வெளியே வருபவர்களிடம் நயமாகப் பேசி நன்கொடை என கேட்டனர். அப்படி கேட்கும் நேரத்தில் குமார் என்பவர் அவர்களை பற்றி தீர விசாரித்ததில் அவர்கள் மோசடி பேர்வழிகள் என்று தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்த னர். ஆங்காங்கே பக்தியின் பேரால் இது போன்று நன்கொடை கேட்டு சுற்றித்திரியும் சந்தேகத்துக்கிடமான நபர்களை கண்டால் அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.