tamilnadu

காஞ்சிபுரம் - திருவள்ளூரில் நிரம்பி வழியும் ஏரிகள்

காஞ்சிபுரம், டிச.4- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்க ளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிகிறது. இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 924 ஏரிகள் உள்ளன. இதில் 555 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 133 ஏரிகள் 75 சதவீதமும், 120 ஏரிகள் 50 சதவீதமும், 101 ஏரிகள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி உள்ளன. பெரும்பாலான ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. ஏரிகளில் சுமார் 16 டி.எம்.சி. வரை தண்ணீர் இருக்கிறது. தென்னேரி, மணிமங்கலம், மானாம்பதி, தையூர், கொண்டங்கி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 576 ஏரிகள் உள்ளன. இதில் 153 ஏரிகள் நிரம்பி வழிகிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. ஏரியின் மொத்த உயரம் 23.3 அடி. தற்போது ஏரியில் 23 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரிப்பகுதியை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  மேலும் ஏரியின் கரையோர பகுதியான முள்ளி, வளர்பிறை, விழுதுமங்கலம் புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.