திருப்பெரும்புதூர்,ஜூன் 6-சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (51). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு திருப்பெரும்புதூர் அருகேதண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 31ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதே மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் புதனன்று இரவு திடீரென ரகுபதிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சுகுணா அங்கிருந்த நர்சுகளிடம் மருத்துவரை அழைத்து வருமாறு தெரிவித்தார். ஆனால் அதிகாலை 2 மணி வரை மருத்துவர்கள் ரகுபதிக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரகுபதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.இதுபற்றி அறிந்த ரகுபதியின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் ரகுபதி உயிரிழந்துவிட்டதாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தொடர்ந்து மருத்துவமனை வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து பேச்சு நடத்தினர்.