ஓட்டுநர் இஸ்லாமியர் என்பதால், ஊபரில் புக் செய்த காரை பெண் வாடிக்கையாளர் ரத்து செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று ஊபர் நிறுவனத்தின் செயலியில் கார் முன் பதிவு செய்துள்ளார். அதில் காரின் ஓட்டுநர் இஸ்லாமியர் என்பதை அறிந்த அந்த பெண் உடனடியாக காரின் முன்பதிவை ரத்து செய்துள்ளார். இது குறித்து அந்த பெண், அவருடைய டிவிட்டர் பக்கத்தில் ஊபர் நிறுவனத்தை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கார் ஓட்டுநர் இஸ்லாமியர் என்பதால் புக் செய்த காரை ரத்து செய்ததாக கூறிய அவர், ”#பாய்காட்அல்லா” என்ற ஹேஷ்டேகை பகிர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு பதிலளித்த ஊபர் நிறுவனம், ”இந்தப் பிரச்னையை நாங்கள் நிச்சயமாக தீர்க்க விரும்புகிறோம். உங்களுடைய ஊபர் கணக்கின் தொலைபேசி எண்ணை எங்களுக்கு அனுப்புங்கள். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.