tamilnadu

img

பணவீக்கம் மேலும் கடுமையாகும்

பெங்களூரு:

ஏப்ரல் மாதத்திய பணவீக்க விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாக உயரும் என்றும், உணவுப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்றும் ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


நடப்பாண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் விவசாய விளைபொருட்களின் விலை உயர்ந்து அதன் தாக்கம் உணவுப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என்பதால் ஏப்ரல் மாத மொத்த பணவீக்க விகிதம் உயரக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதால் பெட்ரோலியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இதன் காரணமாக விலை வாசியும் ஏறிக்கொண்டே செல்கிறது. 


ரெப்போ வட்டி விகிதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 0.25 புள்ளிகளும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 0.25 புள்ளிகளும் ரிசர்வ் வங்கி குறைத்தது. பணவீக்க விகிதம் மேலும் உயரக்கூடும் என்பதால், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு வரும் ஜூன் மாதத்தில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான், ஏப்ரல் மாதத்தின் மொத்த பணவீக்க விகிதம் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் அதிகரிக்கக்கூடும் என்று ‘ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 


ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான 4 சதவிகித அளவிலேயே பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைத்தாலும் அதையும் தாண்டி பணவீக்கம் உயரக்கூடும் என்று ‘ராய்ட்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த மே 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையிலும் நடத்திய ஆய்வில் சில்லரைப் பணவீக்க விகிதம் சுமார் 2.97 சதவிகிதமாக உயரக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தை விட 0.11 சதவிகிதம் கூடுதலாகும். மார்ச் மாதத்தில் சில்லரைப் பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக இருந்தது. 


முந்தைய மாதத்தின் விலை உயர்வு ஏப்ரல் மாதத்திலும் தொடரும் என்று நாங்கள் கணித்திருந்தோம். அதற்கேற்பவே தற்போது சில்லரைப் பணவீக்க விகிதமும் முன்னர் கணித்த அளவைக் காட்டிலும் மிதமிஞ்சி அதிகரித்துள்ளது என்று சிட்டி (Citi) ஆய்வு நிறுவன பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

;