கரூர், ஜூன் 22 - கரூர் மாவட்டம் குளித்தலை நகரம், தெற்கு தேவதானத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கூடத்தின் மொத்த நிலப்பரப்பு 13.5 செண்ட். தற்போது பள்ளிக்கூடம் 3 செண்ட்டில் கட்டிடத்துடன் செயல்பட்டு வருகிறது. மீதி 10.5 செண்ட் இடத்தை காணவில்லை. காணாமல் போன பள்ளி நிலத்தை கண்டுபிடித்து அளந்து அத்துக்கல் நட்டு கம்பி வேலி அமைத்து பள்ளி குழந்தைகளுக்கு கழிப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 24.6.2019 அன்று போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர். ஜூன் 22 காலை 11 மணியளவில் குளித்தலை கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேற்படி அமைதி பேச்சுவார்த்தையில், மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் குளித்தலை காவல் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக ஆலுவலர், நில அளவியர் முன்னிலையில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஜெயபால் தா/பெ பிச்சை சேகர் தஃபெ பிச்சை, முருகம்பாள் க.பெ தண்டபாணி, மாணிக்கம் த.பெ பரமசிவம் ஆகிய நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்து வந்தனர். அவர்களை இடத்தை காலி செய்து பள்ளிக்கு ஒப்படைக்குமாறு கேட்டு கொண்டனர். அந்த நிலத்தை காலி செய்ய இன்னும் 10 நாட்கள் அவகாசம் கேட்டு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நில அளவையாளரிடம் மீண்டும் நிலத்தை அளந்து அத்துகல் இடுமாறும் உத்தரவிட்டனர். ஆகையால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேற்கண்ட பேச்சுவார்த்தையில், முன்னாள் மாநில குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன், ஒன்றியச் செயலாளர் மு.கா.சிவா, ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகர், சமுக ஆர்வலர் சுந்தர் உள்ளிட்டோர் கொண்டனர்.