tamilnadu

கடன் வலையில் சிக்கவைத்த ஆலை உரிமையாளர்

கடலூர் மாவட்டம் அம்பிகா சக்கரை ஆலை, சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர் கரும்பு விவசாயிகள் பெயரில் தனித்தனியாக பல்வேறு வங்கிகளில், பல்வேறு கிளைகளில் ரூ.350 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். காலம் கடந்த கடனாக கணக்கிட்டு வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் இப்படி ஒரு மோசடி நடந்திருப் பது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து, ஆலை அதிகாரிகளை சந்தித்த விவசாயிகளிடம் அந்த கடனை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆலையே கட்டிவிடும் என சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால், அந்த ஆலை மூடப்பட்ட தால் வங்கியில் இருந்து தொடர்ந்து நோட்டீஸ் வந்து கொண்டே இருப்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் கரும்பு விவசாயிகள். காவல்துறை அறிவுரை...பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்டத் தலைவர்கள் ஜி.மாதவன், ஜி.ஆர்.ரவிச் சந்திரன், எஸ்.தட்சணாமூர்த்தி ஆகியோர் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளிக்க வேண்டும் என்று கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் கூறியுள்ளார். இதுகுறித்து திட்டக்குடி வட்டம் கூடலூர் கிராமம் விவசாயி கே.கொளஞ்சிநாதன் ( 59) கூறுகையில்,“ இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்த கரும்பை பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தேன். 2016-17 அரவை பருவத்தில் அனுப்பிய 10 டன் கரும்புக்கு இதுவரைக்கும் பணம் கொடுக்க வில்லை” என்றார்.தற்போது, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 476 ரூபாய் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலமாக வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள. இதுபோல் மூன்று நோட்டீஸ் வந்தது. ஆலை நிர்வாகத்திடம் கேட்டபோது நாங்கள் கட்டிவிடுகிறோம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என க்கூறியதாகவும் தெரிவித்தார்.சேவூர் சீனிவாசன் (47), “சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கடந்த 2015- 2016 ஆம் ஆண்டு பருவத்திற்கு 159 டன் கரும்பு அனுப்பினேன். அதற்கு ரூ. 3 லட்சத்து 85 ஆயிரத்து 575 வழங்க வேண்டும். கல்லூர் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு துவங்க கையெழுத்து பெற்றனர். வங்கி கணக்கில் அதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரவு வைத்தார்கள். நேரடியாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தனர். இன்னும் ரூ. 55 பாக்கியுள்ளது. ஆனால் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரம் கடனை வட்டியுடன் கட்ட வேண்டும் என்று வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தது. எனக்கு மட்டுமல்ல 28 விவசாயிகளுக்கு இதுபோன்று நோட்டீஸ் வந்துள்ளது. ஆலை இயங்காத சூழ்நிலையில் அந்தக் கடனை ஆலை நிர்வாகத்தி னரிடம் இருந்து வசூல் செய்யக்கோரியும் எங்களுக்கு சேர வேண்டிய பாக்கியை பெற்றுக்கொடுக்குமாறும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உள்ளேன்” என்றார்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன்,“ இந்த பிரச்சனையில் வழக்குப் பதிவு செய்து அந்த ஆலையின் உரிமையாளரை கைது செய்து விசாரணை செய்யாமல் விடுவித்தது கண்டிக்க த்தக்கது” என்றார்.கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தஞ்சையிலும் இதுபோன்ற மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். எனவே, மோசடி பிரிவுன் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆலை உரிமையாளர் மற்றும் தொடர் புடைய வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும். உண்மையை வெளிக் கொண்டு வர உயர் மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் ரவீந்திரன் வலியுறுத்தினார்.வெள்ளம், வறட்சி, புயல் என இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் கடலூர் மாவட்ட விவசாயிகள்,இதிலிருந்து எதிர் நீச்சல் போட்டும் அரசுகள் அறிவிக்கும் குறைந்தபட்ச விலையைக் கூட கொடுக்காமல் தனியார் சர்க்கரை ஆலைகள் அலைகழிப்பதால் விளைவித்த கரும்புக்கு உரிய பணத்தை வாங்குவதற்கே வாழ்நாள் முழுவதும் போராடி வரும் அந்த விவசாயிகளின் தலையில் இந்த சம்பவம் இடியாய் விழுந்திருக்கிறது. இந்த மோசடிக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?-வ.சிவபாலன்