tamilnadu

img

மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கப்பட்ட பெட்ரோல் பங்க் – கிற்கு சீல் - சிபிசிஐடி நடவடிக்கை

2000 லிட்டர் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-கிற்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி விஷசாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக விஷசாராயம் குடித்தவர்களில் சிலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், சிலரை சேலம் அரசு மருத்துவமனை, பு துச்சேரி ஜிப்மா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சிலர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 65 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விஷசாராயத்தில் 29.7% வரை மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் நிலையத்தில் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் மெத்தனால் மற்றும் ரசாயனங்களைப் பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார், அந்த பெட்ரோல் பங்க் - கிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.  

;