கடலூர்,செப். 25- கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டம் முடக்கப்பட்டு உள்ளதை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சிறப்பு மாநாடு வன்மையாக கண்டித்துள்ளது. கடலூரில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் ஏ.வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை, மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், ஒன்றியச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.தமிழரசன், ஒன்றிய துணைத் தலைவர்கள் கே.கோதண்டபாணி, ஏ.கோவிந்தம்மாள், ஏ.பாவாடைசாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் டி.நடராஜன், எஸ்.மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.சங்கர் நன்றி கூறினார். 100 நாள் வேலை திட்டத்தில் பெயரளவிற்கு சொற்ப எண்ணிக்கையில் வேலை அளிக்கப்படுகிறது. அதற்கும் முழுமையாக சட்டக்கூலி ரூ.229 வழங்கப்படுவதில்லை. இது விவசாய தொழிலாளர்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாகும். பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும், சட்டக் கூலியை வழங்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்தியுள்ளது. கடலூர் ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஆற்றங்கரைகளில், வாய்க்கால்கள், ஏரிக்கரை, மலைதரிசு, ஓடை, கோயில், வக்பு வாரியம், தேவாலயம், மடம், அறக்கட்டளை போன்ற ஆட்சேபனைக்குரிய நிலங்களில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இவர்களை சட்டத்தை காட்டி அடாவடித்தனமாக அப்புறப்படுத்துவதை கைவிட்டு மாற்று இடம் வழங்கி பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.